சென்னையின் 10% நிலம் கடல்நீரால் அழிந்து போகும் என்கிறது ஆய்வறிக்கை: மனோ தங்கராஜ்!

சென்னை நகரை பொறுத்தவரை கட்டுமானங்கள் நிரந்தரமாக தடை செய்ய வேண்டிய காலகட்டத்தை கடந்து பயணிக்கிறோம். சென்னையின் 10% நிலம் கடல்நீரால் அழிந்து போகும் என்கிறது ஆய்வறிக்கை என முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடல் மட்ட உயர்வு, விரைவான நகரமயமாக்கல் ஆகிய காரணங்களால் கடலோரப் பகுதிகளுக்கு பாதிப்பு அண்மைக்காலங்களில் வேகமாக அதிகரிது வருகிறது. இதுபற்றி சிஎஸ்டிஇபி என்ற அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில், 2050ம் ஆண்டு வாக்கில், 800 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் (உலகில் 10% பேர் மற்றும் மொத்த நகர்ப்புற மக்கள் தொகையில் 13% பேர்), 570 க்கும் மேற்பட்ட கடலோர நகரங்களில் வசிப்பவர்கள் குறைந்தபட்சம் 0.5 மீ கடல் மட்ட உயரத்தை சந்திப்பார்கள் என்றும், அவர்கள் கடலோர வெள்ள அபாயத்தில் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018ல் வெளியான UCCRN தொழில்நுட்ப அறிக்கையை சுட்டிக்காட்டி தெரிவித்துள்ளது சிஎஸ்டிஇபி அமைப்பு. இந்தியாவை பொறுத்தவரை இந்தியா, இந்தியப் பெருங்கடல், அரபிக் கடல் மற்றும் விரிகுடாவால் சூழப்பட்டுள்ளது. வங்க கடல் கடற்கரை என்பது 7,517 கிமீ நீளத்திற்கு உள்ளது. இதில் சுமார் 170 மில்லியன் மக்கள் அல்லது நாட்டின் மக்கள்தொகையில் 15.5% பேர் ஒன்பது கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வசிக்கிறார்கள் (குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா,மற்றும் மேற்கு வங்காளம்). இந்தியாவின் கடற்கரையோரம் 13 பெரிய துறைமுகங்கள் மற்றும் 180 சிறிய துறைமுகங்கள் இருக்கின்றன. இந்நிலையில் இந்த பகுதியில் உயரும் கடல் மட்டம் கடலோரப் பகுதியை உயிரியல் ரீதியாக பாதிக்கும் என்று பல ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. கடல் நீர்மட்டம் உயர்வால், கடல் நீர் ஊடுருவல், கடுமையான உப்பு தன்மையாக நிலத்தடி நீர் மாறுவது, நிலத்தடி நீர் கடல் நீராக மாறுவத போன்ற சிக்கல் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக சிஎஸ்டிஇபி அமைப்பு சுட்டிக்காட்டியிருந்தது. மேலும் பல விஷயங்களை அந்த அமைப்பு சுட்டிக்காட்டியிருந்தது.

இந்த அறிக்கைகளை சுட்டிக்காட்டி, முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

இன்றைய தேதியில் சென்னையில் பிறக்கும் குழந்தை 2060-ல் 36 வயதை எட்டி விடும். அன்று சென்னையின் 10% நிலம் கடல்நீரால் அழிந்து போகும் என்கிறது ஆய்வறிக்கை. 2100-ம் ஆண்டில், அதாவது அக்குழந்தையின் 76-வது வயதில் சென்னையின் 207 சதுர கிலோ மீட்டர் நிலம் கடல் நீரில் மூழ்கிவிடும் என்கிறது சிஎஸ்டிஇபி (CSTEP) ஆய்வறிக்கை. மனிதன் இயற்கையின் சுழற்சியை தடுத்த நிறுத்துவது சாத்தியமல்ல. ஆனால் பேரழிவை தவிர்க்கக்கூடிய சில அம்சங்கள் மனிதனுக்கு முன் இருக்கின்றன. குறிப்பாக அதிதீவிர நகரமயமாக்கல், தேவைக்கு மிகையான ஆடம்பர கட்டுமானங்கள், இயற்கையை பாதிக்கும் செயற்கைகள், தேவையற்ற நுகர்வு கலாச்சாரம், பிளாஸ்டிக் மாசுபாடு, இயற்கை வளங்கள் சுரண்டல், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு போன்றவற்றை நமக்கு நாமே கட்டுப்படுத்துவது எதிர்கால தலைமுறைக்கு நாம் ஆற்றும் சேவை. பெருமழை, வெப்ப அலை, பெரும் புயல் போன்ற இயற்கையின் ஒவ்வொரு சமிக்ஞைகளும் மனித இனத்திற்கு வழங்கப்படும் எச்சரிக்கை ஒலி. ”

சென்னை நகரை பொறுத்தவரை கட்டுமானங்கள் நிரந்தரமாக தடை செய்ய வேண்டிய காலகட்டத்தை கடந்து பயணிக்கிறோம். இது போன்ற நகரங்களில் மக்கள் தொகை குவிவது சிக்கலானது. வளர்ச்சி பரவலாக்கப்பட வேண்டும், இயற்கையுடன் இசைந்திருக்க வேண்டும், சக உயிரினங்களை பாதுகாப்பதாக இருக்க வேண்டும், அது போன்று ஐ.நா. வகுத்துள்ள நீடித்த நிலையான வளர்ச்சி கூறுகளை ஒவ்வொரு திட்டமிடுதலிலும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பதை இச்சூழல்கள் நமக்கு நன்கு உணர்த்துகின்றன. இவ்வாறு கூறியுள்ளார்.