திமுக அரசின் மெத்தன போக்கால் 15,000 பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு: டாக்டர்.சரவணன்!

திமுக அரசின் மெத்தன போக்கால் கடந்த 8 மாதங்களில் 15,000 பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள 58,879 அரசு பள்ளிகளிலும், 12,524 கிராம ஊராட்சிகளில் மருத்துவ முகாமை நடத்தி நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் சரவணன் கூறியதாவது:-

கடந்த 3 ஆண்டுகளில் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை சுகாதாரத் துறையில் எந்த முன்னேற்றம் இல்லை. குறிப்பாக கடந்த கடந்த அதிமுக ஆட்சிக்காலத்திலும், எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்திலும் பருவ மழை காலங்களில், மக்களுக்கு தேவையான மருத்துவ முகாமை அந்தப் பகுதியின் நடத்தி நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. அதுமட்டுமல்ல கடந்த 10 ஆண்டுகளில் தானே, நீலம், மடி, வர்தா, ஓக்கி, கஜா, நிவர் போன்ற கடுமையான புயல் தாக்கம் ஏற்பட்டபோது தொற்றுநோய் பரவாமல் இருக்க பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்தனர். ஆனால் இன்றைக்கு திமுக ஆட்சிக்கு வந்து பிறகு 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட புயல்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை சரியாக எடுக்காமல் இருந்ததால், பல்வேறு தொற்று நோய் ஏற்பட்டு மக்கள் பாதிப்பு அடைந்தனர்.

தற்போது கூட டெங்கு நோய் பரவல் அதிகரித்து உள்ளது. சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, திருப்பூர், திருவள்ளூவர், தேனி ,மதுரை, நெல்லை, தஞ்சாவூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டது. இந்த 8 மாதத்தில் மட்டும் 15,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவித்தாலும், அரசு சரியாக கணக்கெடுக்காத காரணத்தால் இன்னும் கூடுதலாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் கூறுகிறது. ஏறத்தாழ டெங்கு நோயால் ஏழு பேர் பலியாகி உள்ளனர். பொதுவாக டெங்கு கொசு என்பது ஒரே நேரத்தில் ஆறு பேரை கடித்து அதன் பாதிப்பை ஏற்படுத்தும், ஏற்கனவே குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் அதிக பாதிப்பில் இருந்தது. தற்போது அந்த மாநிலக்காட்டிலும் தமிழகத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

தற்போது வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துவிட்டது அரசு தரப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததாக வழக்கம் போல பத்திரிகை செய்தியை அரசு வெளியிட்டுள்ளது, குறிப்பாக இதுபோன்ற காலங்களில் எலி காய்ச்சல், காலரா, டைபாய்டு, மலேரியா, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் அதிகமாக பரவும். இது போன்ற காலங்களில் அனைத்து மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள் இருப்பு உள்ளதா? என்று அரசு வெள்ளை அறிக்கை விடவேண்டும். மேலும் தேங்கிய மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் இல்லை என்றால் அந்தத் தேங்கிய மழைநீரில் இருந்து கொசு மூலம் காய்ச்சல் அதிகமாக பரவும். அதேபோல் குடிக்கும் தண்ணீரில் பாக்டீரியா ஏற்பட்டு அதன் மூலம் காலரா போன்ற நோய்கள் வர வாய்ப்பு அதிகரித்து வருகிறது, மக்களுக்கு போதிய விழிப்புணர்வு வழங்க வேண்டும்.

தற்போது காலாண்டு முடிந்து பள்ளிக்கூடங்கள் தொடங்கிவிட்டன. தனியார் பள்ளிகளில் போதிய விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசு பள்ளிகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும். தமிழக முழுவதும் ஏறத்தாழ 58,879 அரசு பள்ளிகள் உள்ளது. இந்தப் பள்ளிகளில் கவனம் செலுத்தி, அங்கே மழை நீர் தேங்காமலும், மருத்துவ முகாமை நடத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.