ஈஷா யோகா மையத்தில் பலர் மாயமாகியுள்ளன: உச்ச நீதிமன்றத்தில் தமிழக போலீஸ் பதில்!

ஈஷா யோகா மையத்திற்குச் சென்ற பலர் காணாமல் போயுள்ளனர் என்றும் ஈஷா மையத்துக்கு உள்ளேயே தகன மையம் செயல்பட்டு வருகிறது என்றும் என ஈஷா யோகா மைய வழக்கில் தமிழக காவல்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோவை அருகே அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் பல்வேறு வித யோகா பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இங்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். மேலும், ஏராளமானோர் அங்கேயே தங்கி, பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில், கோவை வடவள்ளியைச் சேர்ந்த காமராஜ் என்பவர் தனது மகள்கள் இருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு யோகா கற்க, ஈஷா யோகா மையத்திற்குச் சென்றதாகவும், அங்கேயே தங்கி விட்ட அவர்களை தங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவர்களை மீட்டுத் தரவேண்டும் என்றும் கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஈஷா யோகா மையம் மீது மொத்தம் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஈஷா யோகா மையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, ஈஷா யோகா மையத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 3 ஆம் தேதி விசாரணை நடத்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, காவல் துறை தரப்பில் தாக்கல் செய்ய வேண்டிய அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் தமிழக காவல்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஈஷா யோகா மையத்தில் கடந்த 15 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை கோவை காவல்துறையினர் உச்ச நீதிமன்றத்தில் 23 பக்கங்கள் கொண்ட அறிக்கையாக தாக்கல் செய்துள்ளனர். அதில் படிப்புக்காக ஈஷா மையம் சென்றவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள், ஆகியோர்கள பற்றிய புகார்களின் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளில் ஈஷா யோகா மையத்திற்கு சென்ற பலர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களை காவல்துறையினராலும் கண்டறிய முடியவில்லை. ஈஷா யோகா மையத்திற்கு உள்ளேயே தகன மையம் உள்ளது, ஆனால் அது தற்போது செயல்படவில்லை என காவல்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஈஷா அறக்கட்டளை தொடர்பாக ஆலாந்துறை காவல் நிலையத்தில் 15 ஆண்டுகளில் மொத்தம் 6 காணாமல் போன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆறு வழக்குகளில், 5 வழக்குகளில் விசாரணை கைவிடப்பட்டுள்ளது. காணாமல் போனவர் இன்னும் கண்டுபிடிக்கப்படாததால் ஒரு வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈஷா யோகா மையத்தில் தங்கியுள்ளவர்களில் சிலருக்கு மனரீதியான அழுத்தம் உள்ளது. அதற்கான கவுன்சிலிங் நடத்தப்பட வேண்டும் என நிபுணர்கள் அறிக்கை அளித்துள்ளனர். அங்கு, பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான குழு முறையாகச் செயல்படவில்லை என்றும் போலீஸ் தரப்பின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மனுதாரர் காமராஜின் இரண்டு மகள்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், இந்த ஆண்டு மட்டும் 70 முறை செல்போனில் அவர்கள் தங்கள் பெற்றோரிடம் பேசி உள்ளதாகவும், 3 முறை நேரில் சந்தித்ததாகவும், ஈஷாவில் தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் ஈஷா தொடர்பான இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. காவல்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் இடம்பெற்றுள்ளதால் இன்று விசாரணை சூடுபிடிக்கும் எனத் தெரிகிறது.