இந்தி பேசாத மாநிலங்களில் எதற்கு இந்தி மாத கொண்டாட்டம்? என கேள்வி எழுப்பி பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தூர்தர்ஷன் தமிழ் எனப்படும் சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவும், சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்களும் இன்று மாலை நடைபெறும் என்றும், அந்நிகழ்ச்சிகளில் தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான இந்தி திணிப்பு என்று பல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ளன.
இந்நிலையில் இந்தி பேசாத மாநிலங்களில், இந்தி மாதம் கொண்டாட்டம் தவிர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில், “எந்த மொழிக்கும் தேசிய மொழி அந்தஸ்தை அரசியலமைப்பு சட்டம் வழங்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். இன்று மாலை சென்னை சிவானந்தா சாலையில் உள்ள தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம் முன்பு திமுக மாணவர் அணியினர் போராட்டம் நடத்த உள்ளனர்.