பெங்களூருவில் உள்ள அரண்மனை மைதானத்தில் கன்னடர் – தமிழர் ஒற்றுமை மாநாடு நாளை (அக். 20) நடைபெறுகிறது.
இதுகுறித்து தாய்மொழி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், இம்மாநாட்டின் ஏற்பாட்டாளருமான எஸ்.டி.குமார் கூறியதாவது:-
கர்நாடக மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான தமிழர்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றனர். கன்னட மொழியை நன்றாக கற்றுக்கொண்டு இந்த மண்ணின் கலாச்சாரத்தை போற்றி வருகின்றனர். இருப்பினும் தமிழர்கள், கன்னடர்களுக்கு எதிரிகள் போல சித்தரிக்கப்படுகின்றனர். இந்த நிலையை மாற்றி, இரு மொழியினரிடமும் ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளேன். இதற்காக கடந்த 6 மாதங்களாக கர்நாடகா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தமிழ் அமைப்புகளையும் கன்னட அமைப்புகளையும் சந்தித்து பேசியுள்ளேன். கட்சி, சாதி, மத பேதமின்றி தமிழர்களும் கன்னடர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்க சம்மதித்தனர்.
பெங்களூரு அரண்மனை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டை முதல்வர் சித்தராமையா தொடங்கி வைத்து விழா உரையாற்றுகிறார். மத்திய அமைச்சர் குமாரசாமி, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். மாநாட்டில் இரு மொழிகளை சேர்ந்த கவிஞர்களின் கவியரங்கம், தமிழர் வரலாறு குறித்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கர்நாடகா முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கிறோம். இவ்வாறு எஸ்.டி.குமார் கூறினார்.