“எவ்வளவு சத்தமிட்டாலும் அரசியலும் ஆன்மிகமும் தமிழகத்தில் என்றைக்கும் கலக்காது” என்று தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் விடுத்துள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-
இந்நாள் ஆரியநர் செய்யும் சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால், முன்னாள் ஆளுநர் அக்காவுக்கு கோபம் வருகிறது. அக்கா அவர்களே, திருவண்ணாமலையில் ‘கிரி’வலம் வரும் பக்தர்களுக்கு எல்லா வசதிகளும் ‘சரி’யாக இருக்கிறதா என்று ஆய்வு தான் செய்தோம். நீங்கள் குதூகலிப்பது போல அது கிரிவலம் அல்ல – ‘சரி’ வலம். ஓடாத தேரை ஓட வைத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு திருப்பணிச் செய்தவர் எங்கள் முதல்வர்.
‘எல்லோருக்கும் எல்லாம்’ என உழைக்கும் எங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்தால், மக்களால் பல முறை நிராகரிக்கப்பட்ட அக்காவுக்கு கோபம் வரத்தான் செய்யும். நியாயம் தானே..! நீங்கள் எவ்வளவு சத்தமிட்டாலும், அரசியலும் ஆன்மிகமும் தமிழகத்தில் என்றைக்கும் கலக்காது. ஒன்றிய அரசின் ‘டி.டி. தமிழை’ப் போல் அக்காவும் இந்திக்கு வக்காலத்து வாங்கும் துரோகத்தை, தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர்கள் ஏதோ பதற்றத்தில் அதை சரியாகப் பாடவில்லை என்றுதான் நான் கருதுகிறேன். அவ்வாறு பாடி இருக்கக் கூடாது. சரியாக பாடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதோடு ஆளுநரை தொடர்பு படுத்தி முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்திருப்பது தவறானது.
தமிழை வைத்து கடந்த காலங்களில் அரசியல் செய்ததைப் போல் தற்போதும் அரசியல் செய்ய திமுக முயல்கிறது. இவ்விஷயத்தில் ஸ்டாலின் காட்டிய அவசரம் அதைத்தான் காட்டுகிறது. பாஜக தமிழ்ப் பற்று இல்லாத கட்சி என்பது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முதல்வர் ஸ்டாலின் முயல்கிறார். தாங்கள்தான் உண்மையான தமிழ் பற்றாளர்கள் என்று சொல்லிச் சொல்லி தமிழக மக்களை ஏமாற்றிய கட்சி திமுக. மீண்டும் அவ்வாறு ஏமாற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த விவகாரத்தை அவர்கள் கையில் எடுத்திருக்கிறார்கள்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தவறுகளை திருத்த திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது மகிழ்ச்சி. தீபாளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், சனாதனத்தை ஒழிப்பேன் என கூறியவர்கள் ஒழிந்து போவார்கள் என கூறினார். அதனால் இவர்களுக்கு அச்சம் ஏற்பட்டிருப்பதையே இவர்களின் இந்த நடவடிக்கை காட்டுகிறது” என குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.