சமூக நீதி பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை கிடையாது: எல்.முருகன்

சமூக நீதி பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை கிடையாது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறினார்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே பாஜக அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் பிரிவு சார்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் கொண்டாடிய ஆயுத பூஜை விழாவில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழக முழுவதும் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. அதன் எடுத்துக்காட்டாக தான் இன்று ஆட்டோ சங்கத்தினர் ஆயுத பூஜையை கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் பாஜகவின் உறுப்பினர் சேர்க்கையும் வேகமாக நடைபெற்று வருகிறது. ஆன்மீகம் மற்றும் தேசத்தின் பக்கம் மக்கள் நிற்கிறார்கள். தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடியவர்கள் நிர்வாகத்திடம் மன்னிப்பு கேட்டு உள்ளனர். அதற்காக விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் மீது குற்றம்சாட்டுவது ஏற்புடையது அல்ல. ஆளுநர் மீது திமுக தலைவர் திட்டமிட்டு குற்றச்சாட்டை வைக்கிறார். தமிழுக்கும், தமிழ் மொழிக்கும் பிரதமர் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நேரத்தில் பாஜக தமிழுக்கு எதிரானது போல் கருதாக்கத்தை உருவாக்க திமுக முயற்சி செய்து வருகிறது. திமுக அரசு சென்னை வெள்ளத்தில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை. மக்களை வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பதை விட்டு விட்டு மக்களை திசை திருப்பும் முயற்சியில் திமுக ஈடுபட்டு வருகிறது. யாரும் இந்தியை திணிக்கவில்லை, கட்டாயமும் படுத்தவில்லை. விரும்பினால் இன்னொரு மொழியை கற்றுக் கொள்ளுங்கள் என்று தான் சொல்கிறோம்.

சமூக நீதி பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை கிடையாது. அருந்ததியர் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த திருமாவளவன் எப்படி மொத்த தலித் மக்களுக்கான தலைவராக இருக்க முடியும்?. அவர் இரட்டை வேடம் போடுகிறார். விசிக என்பது ஒரு சின்ன கட்சி, அதனை நான் சிறிய கட்சியாக பார்க்கிறேன். திருமாவளவன் முதல்வர் ஆகுவது என்பது நடக்காது. இவ்வாறு அவர் கூறினார்.