அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நடிகை கெளதமி நியமனம்!

அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நடிகை கெளதமியை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.

பாஜக பிரமுகர் அழகப்பன் என்பவர் தனது சொத்துகளை ஏமாற்றிவிட்டதாக குற்றச்சாட்டு எழுப்பிய கெளதமி, கடந்த பிப்ரவரி மாதம் பாஜகவில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், அதிமுகவில் இணைந்தார். மேலும், பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த தடா து. பெரியசாமிக்கு, எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பதவி வழங்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளராக ஃபாத்திமா அலி, விவசாயப் பிரிவு துணைச் செயலாளராக சன்னியாசி ஆகியோரை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.