மதுவை படிப்படியாக குறைப்போம் என்ற தமிழக அரசின் உத்தரவாதம் கேள்விக்குறியாகி உள்ளது என்று சரத்குமார் கூறியுள்ளார்.
முன்னாள் எம்.பி. சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் ஆளும் அரசின் கூட்டணியில் இருக்கும் வி.சி.க., மது ஒழிப்பு மாநாடு நடத்தியதோடு, மத்திய அரசு மது விலக்கை அமல்படுத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்து அதிக நாட்கள் கூட ஆகாத நிலையில் டாஸ்மாக் கடைகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதற்காக 3,500 டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுண்டர்கள் அமைத்தல், பல இடங்களில் QR Code பயன்படுத்துதல் போன்ற புதிய வியாபார உத்திகளை அரசு அறிவித்திருப்பது, அரசின் நோக்கத்தைக் குறித்து சந்தேகிக்க வைக்கிறது.
தீபாவளிப் பண்டிகையையொட்டி விற்பனையை அதிகப்படுத்த இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை மக்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியும். மதுவிலக்குதான் முதல் கையெழுத்து என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்பதோடு, படிப்படியாக மதுவைக் குறைப்போம் என்ற அரசின் உத்தரவாதமும் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
மதுவருவாயை மட்டும் நம்பி தமிழகத்தை வழிநடத்துவதாக எழும் குற்றச்சாட்டுகளை அரசு புறந்தள்ளிவந்தாலும் அது உண்மை என தற்போதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதனால், இனிமேலும் மத்திய அரசு மீது அனைத்து பழிகளையும் சுமத்தி மக்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடாமல், மக்கள் நலன் காக்கும் நடவடிக்கைகள் குறித்து அரசு ஆலோசிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.