கனவுலகில் இருக்கிறாரா எடப்பாடி பழனிசாமி?: மு.க. ஸ்டாலின்!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கனவுலகில் இருக்கிறாரா என முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டில் திமுகவின் மதிப்பு சரிந்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு பதில் அளிக்கும் வகையில், அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

நாமக்கல் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நாமக்கல்லுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.10 கோடி நிதி வழங்கப்படும். சேந்தமங்கலம் கொல்லிமலை பகுதியில் விளையக்கூடிய பழங்கள் மற்றும் காய்கறிகளை பதப்படுத்தி விற்பனை செய்ய குளிர்பதனக் கிடங்கு வசதியுடன் கூடிய வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்கப்படும். மோகனூரில் இருக்கும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையென பெயரிடப்பட்டு, இந்த ஆலையின் எத்தனால் உற்பத்தி அலகு ரூ.4 கோடியில் மேம்படுத்தப்படும். நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு ரூ.30 கோடி மதிப்பீட்டில் தார்ச் சாலை அமைக்கப்படும்.

நாமக்கல் மாவட்டத்துக்கு எண்ணற்ற நலத்திட்ட உதவிகளைத் தொடக்கிவைத்துவிட்டு உங்கள் முன்பு நிற்கிறேன். நாமக்கல்லை மாவட்டமாக மாற்றியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி; மாநகராட்சியாக தரம் உயர்த்தியது திமுக அரசு. சேந்தமங்கலத்தில் விளையும் காய்கறி, பழங்களுக்காக வேளாண் விற்பனை மையம் தொடங்கப்படும். அருந்ததியர் உள் ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்த வகையில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

மாவட்ட வாரியாக நேரடியாகச் சென்று கள ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளேன். நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு தார்ச்சாலை அமைத்துத் தரப்படும். திமுகவுக்கு வாக்களிக்க மறந்தவர்களும் பாராட்டும் அரசாக திமுக அரசு விளங்குகிறது.

திமுகவின் மதிப்பு சரிந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். அவர் கனவுலகில் இருக்கிறாரா? எதிர்க்கட்சித் தலைவர் கூறுவதை மக்கள் காமெடியாக எடுத்துக்கொள்கின்றனர்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது தமிழகத்தின் மதிப்பு அடமானம் வைக்கப்பட்டிருந்தது. மக்களால் புறக்கணிக்கப்பட்ட அதிமுகவைப் பற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம்.

இந்தியத் துணைக் கண்டத்துக்கே வழிகாட்டும் நம்ம திராவிட மாடல் ஆட்சியால், தொடர்ந்து தமிழ்நாட்டை தலைநிமிர்ந்து நடைபோட வைப்போம். அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உயர்த்துவோம். இவ்வாறு முதல்வர் உரையாற்றினார்.