உதயநிதி வயசுதான் எனக்கு அனுபவம்: எடப்பாடி பழனிச்சாமி!

நான் பதவிக்கு வந்ததை பற்றி பேசும் உதயநிதி ஸ்டாலினின் வயதை விட எனக்கு அரசியல் அனுபவம் அதிகம், அனுபவத்தால், உழைப்பால் தான் எனக்கு பதவி கிடைத்தது என எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்

சேலத்தில் அதிமுக கூட்டத்தில் பங்கேற்ற பின் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

திமுக ஆட்சியின் ஒரு துறையில் மட்டுமல்ல; பெரும்பான்மையான துறையில் உள்ள அமைச்சர்கள் மிகப்பெரிய ஊழல் செய்துள்ளனர். இதெல்லாம் 2026 அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நாட்டு மக்களுக்கு வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படும். திமுக ஆட்சியில் கொஞ்சம் பெய்த மழைக்கு தாக்கு பிடிக்க முடியவில்லை. தற்போது புயல் வரவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சென்னை மாநகரில் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காமல் வடிகால் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்கள். 20 சென்டிமீட்டர் அளவிற்கு மழை பெய்தாலும் மழைநீர் தேங்காது, மழை வடிகால் பணிகள் நிறைவேற்றப்பட்டது. 98 சதவீதம் பணிகள் முடிந்து விட்டது என்று கூறினார்கள். உண்மை மக்களுக்கு தெரிந்துவிட்டது. வெள்ள தடுப்பு பணிகள் நிறைவேற்றப்படவில்லை என்று கொஞ்சம் அதிகமாக பெய்த மழைக்கு இவ்வாறு பேசுகிறார்கள். திமுக ஆட்சியில் தொடர்ந்து தூர்வாடப்படாததால்தான் கொஞ்சம் மழைக்கு கூட தாக்குபிடிக்க முடியவில்லை; இதனால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.

திமுக கூட்டணி வலிமையாக உள்ளது என்று கூறுகிறார்களே கம்யூனிஸ்ட் கட்சி என்ன ஆனது. புகை ஆரம்பித்துவிட்டது அல்லவா? திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள் உள்ளிட்டவைகள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால் திமுக நிறைவேற்றாமல் உள்ளனர். அவர்களும் கூட்டணிக்கு எச்சரிக்கை மணி அடித்து வருகிறார்கள். அந்த கூட்டணிகள் இருக்குமா? இருக்காதா? என்று பொறுத்திருந்து பார்ப்போம். சட்டமன்றத் தேர்தலுக்காக சிறப்பான கூட்டணி அதிமுக அமைக்கும் பெரும்பான்மை இடத்தில் வெற்றி பெறுவோம்.

நடிகர் விஜய் திரை உலகில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். மக்களுக்கு விஜய்யும் பொதுசேவை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார் அதன் விருப்பத்தில் கட்சி தொடங்கியுள்ளார். முதலாவது மாநில மாநாடு நடத்தும் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்.

அதிமுக ஆட்சி காலத்தில் 36,000 போராட்டங்கள் நடைபெற்றது. யார் போராட்டம் நடத்தினாலும் முறையாக நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. எதிர்க்கட்சி மட்டுமில்லாமல் மற்ற கட்சிகளுக்கும் அனுமதி கொடுப்பதில்லை. ஒவ்வொரு அரசியல் கட்சியும் கனவு கண்டு கொண்டிருக்கிறது. எல்லாம் அரசியல் கட்சிகளும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று தான் அனைவரின் விருப்பம். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது மக்களுடைய கையில் தான் உள்ளது.

எனக்கு பதவி கிடைத்தது குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார். உதயநிதி ஸ்டாலினின் வயதை விட எனக்கு அனுபவம் அதிகம். உதயநிதிக்கு 46 வயது தான் ஆகிறது. ஆனால் நானும் 50 ஆண்டுகள் அரசியலில் இருந்திருக்கிறேன். தற்போது அதிமுக பொதுச்செயலாளராக வந்திருக்கிறேன். அனுபவம் உழைப்பு காரணமாகவே எனக்கு கிடைத்தது. வாரிசு அடிப்படையில் நான் அரசியலுக்கு வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.