அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி சபாநாயகர் அப்பாவு தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் குழப்பம் நிலவிய 2017 காலத்தில் அக்கட்சியின் 40 எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் சேர தூதுவிட்டனர் என்றும், ஆனால், அதனை மு.க.ஸ்டாலின் ஏற்க மறுத்துவிட்டார் எனவும் பேசினார். அப்பாவு பேச்சு அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கும் களங்கம் உண்டாக்கும் வகையில் உள்ளதாகக் கூறி அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு எம்.பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும், வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அப்பாவு தனது பேச்சில் யார் பெயரையும் குறிப்பிடவில்லை என்றும், அப்படி இருக்கும்போது அதிமுகவுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் அவர் பேசினார் என்று எப்படி கூற முடியும் என்பது உள்பட பல கேள்விகளை நீதிமன்றம் எழுப்பியது.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்பாவு தரப்பில், “40 எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைய இருந்ததாக அப்பாவு கூறியது தகவல் தானே தவிர அவதூறு அல்ல. அப்பாவு பேச்சு மனுதாரர் பாபு முருகவேல் மற்றும் அதிமுகவுக்கு எந்த வகையிலும் எதிரானது அல்ல.
அதேபோல பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் 40 எம்.எல்.ஏ.க்களில் யாராவதுதான் வழக்கு தொடர முடியும். ஆனால், அவர்கள் பெயரை அப்பாவு தனது பேச்சில் குறிப்பிடவில்லை. அதேபோல மனுதாரர் பாதிக்கப்பட்டவர் இல்லை என்பதால் அவதூறு வழக்கை அவரால் தாக்கல் செய்ய முடியாது” என்று தெரிவித்தார்.
அதே சமயம் பாபு முருகவேல் தரப்பில், அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளராக இருப்பதால் வழக்கு தொடர உரிமை உள்ளது என வாதம் வைக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார்.