மத்திய – மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள திட்டங்கள் அனைத்தும் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களை முழுவதுமாக சென்று சேரவில்லை என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தெரிவித்தார்.
ஆதிதிராவிடர் வணிக – தொழில் வளர்ச்சிக் கூட்டமைப்பின் சார்பில் புதுச்சேரி எஸ்.சி/எஸ்.டி. பொருளாதார விடுதலை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பங்கேற்று அம்பேத்கர் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அவர் பேசியதாவது:-
ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய சமுதாய மக்களின் இன்றைய வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது. கல்வி மறுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்தவர்கள் உலக அளவில் இன்று கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் முன்னணியில் இருக்கிறார்கள். கல்வி கற்றதன் பயனாக, வேலை வாய்ப்புகளிலும் ஐஏஎஸ், ஐபிஎஸ் என்று உயர் பதவிகளை இன்று அலங்கரிக்கிறார்கள். அரசியலில் கூட இத்தகைய நிலையை நாம் பார்க்க முடிகிறது. ஆனால், தொழில் முதலீட்டாளர்களாக, தொழில் முனைவோர்களாக ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் உயர்ந்து இருக்கிறார்களா என்றால் அது மிகவும் குறைவு என்றுதான் சொல்ல முடியும்.
அதேநேரத்தில் பெரும்பாலானவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள். எந்த ஒரு சமுதாயமும் பொருளாதார ரீதியாக பலம் பெறும் போதுதான் ஒரு நிலையான வளர்ச்சியை நோக்கி நகர முடியும். பொருளாதாரத்தில் ஒரு சமுதாயம் வலுவடைய வேண்டும் என்றால் அதில் தொழில் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. தொழில் துறையில் முன்னோடிகளாக – வெற்றி பெற்றவர்களாக உருவாகும் போதுதான் அவர்கள் சார்ந்த சமுதாயத்தின் வளர்ச்சி உறுதி செய்யப்படுகிறது.
சமுதாயத்தில் உள்ள அத்தனை சமூகங்களின் வளர்ச்சியை உள்ளடக்கிய ஒட்டுமொத்தமான வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி – முழுமையான வளர்ச்சி. இந்த அடிப்படையில் தான் மத்திய – மாநில அரசுகள் பயணித்துக் கொண்டு இருக்கின்றன. மத்திய – மாநில அரசுகளின் தொழில் வளர்ச்சித் திட்டங்கள் எல்லாம் பொதுவாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இலக்காக கொண்டுதான் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், மத்திய – மாநில அரசுகள் கொண்டு வந்து இருக்கின்ற திட்டங்கள் அனைத்தும் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களை முழுவதுமாக சென்று சேரவில்லை என்பதை ஒரு குறையாகவே நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.
சிஐஐ, ஃபிக்கி (FICCI), சேம்பர் ஆப் காமர்ஸ் போன்ற அமைப்புகளிலும் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் தேவைகளை அணுக ஒரு தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும். வங்கிக் கடன் திட்டங்கள் மூலமாக, தொழில் முனைவோர் பண முதலைகளிடம் கடன் தொல்லையில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வழி கிடைத்திருக்கிறது. முத்ரா கடன் திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதக் கடன் ஒடுக்கப்பட்ட எஸ்சி, எஸ்டி சமூகங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு தர வேண்டும் என்ற விதியை மத்திய அரசு ஏற்படுத்தி இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.