விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு மீது தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக துர்கா அஸ்வத்தாமன் என்பவர், தேசிய மகளிர் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் ஆசிரியராக உள்ளேன். எனது கணவர் அஸ்வத்தாமன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகவும், பாஜக மாநில செயலாளராகவும் உள்ளார். நான், என் கணவர் மீது வரதட்சணை புகார் அளித்துள்ளதாக விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு அவதூறுகளை கூறி வருகிறார்.
விசிக தலைவர் திருமாவளவன் மீது மனு ஸ்மிருதி விவகாரத்தில் என் கணவர் புகார் அளித்து வழக்குபதிய செய்தார். கடந்த மாதம் காரைக்காலில் இருந்து தனது மகளின் பக்கவாத நோய் சிகிச்சைக்காக புவனகிரிக்கு வந்த ஒரு குடும்பம், விசிகவினரால் பாதிக்கப்பட்டது. அப்போது, பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்து, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிய செய்தார் என் கணவர்.
இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, சமூக வலைதள பக்கத்தில் எனது திருமண புகைப்படங்களை பதிவிட்டு, அவதூறு கருத்துகளை பதிவிடுகிறார். எனவே, வன்னியரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.