தீபாவளிக்கு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுப்பதை கைவிட வேண்டும்: டிடிவிதினகரன்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவிதினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவிதினகரன் கூறியுள்ளதாவது:-

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சொந்தஊர்களுக்கு செல்லும் பயணிகளின் தேவைக்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கபோக்குவரத்துத்துறை முடிவுசெய்திருப்பது அப்பட்டமான தொழிலாளர் விரோதப் போக்காகும்.

தனியார் நிறுவனங்களின் மூலம் ஆட்சேர்ப்பு, ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் நியமனம் வரிசையில் தற்போது தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுப்பது. இவையாவும் போக்குவரத்துறையை தனியார் மயமாக்கும் முயற்சியே. எனவே, பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் போக்கை கைவிட்டு, புதிய பேருந்துகளை வாங்கி இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.