தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுத்து கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று திருச்சி போலீசில் மணப்பாறை வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் புகார் மனு கொடுத்துள்ளார்.
திருச்சி எஸ்.பி. வருண்குமாரிடம் இந்த புகார் மனுவை முரளி கிருஷ்ணா கொடுத்துள்ளார். திருச்சி எஸ்.பி. வருண்குமாரிடம் மணப்பாறை வழக்கறிஞர் முரளிகிருஷ்ணா கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
எக்ஸ் தளத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘தமிழ்த் தாய் வாழ்த்தில் 2 வரியை தூக்கியதற்காக கொந்தளிப்பதா?’ என்ற தலைப்பில் நான் ஆட்சிக்கு வந்த உடன் தமிழ்த்தாய் வாழ்த்தே இருக்காது என்று மிகவும் கண்ணிய குறைவாகவும், தமிழ்த் தாய் வாழ்த்தை அவமரியாதை செய்கிற நோக்கத்தோடும் ஆணவத்துடனும் பேசிய பேச்சுகளும் குறிப்புகளும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதனால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனையில் கடந்த 21-ந் தேதி சிகிச்சை பெற்றேன்.
சீமான், தமிழ்த் தாய் வாழ்த்தை மிகவும் கொச்சைப்படுத்தி அரசின் உத்தரவு இல்லாமல், தான்தோன்றித்தனமாக தமிழ்த் தாய் வாழ்த்தை மிகவும் கேவலமாகவும், அருவறுக்கத்தக்க வகையில் தொடர்ந்து பேசி வருவதால் மாணவர்கள்- இளைஞர்கள்- குழந்தைகள் மத்தியில் தமிழ்த் தாய் வாழ்த்து பற்றியும் அதன் மீதான நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாலும் தமிழ் மொழியின் தொன்மை பாதித்து தமிழர்களுக்கு அவமரியாதை ஏற்பட்டுள்ளதால் சீமான் மீது BNSS-ன் படி கடும் நடவடிக்கை எடுத்து (குற்றவியல்) மேலும் தேசதுரோக வழக்கினை பதிவு செய்து அவருக்கு கடும் தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
திருச்சி எஸ்.பி. வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் ஏற்கனவே கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இழிவுபடுத்தி கொலை மிரட்டல்கள் விடுத்திருந்தனர். இதனால் நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்டோருக்கு எதிராக திருச்சி எஸ்பி வருண்குமார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.