ஜம்மு கஷ்மீர் முதல்வர் இல்லாமல் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம்: ப.சிதம்பரம் கண்டனம்!

ஜம்மு-காஷ்மீரில் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல்வா் இல்லாமல் துணை நிலை ஆளுநரால் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுவதற்கு முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் கடுமையாக விமா்சித்துள்ளாா். தோ்ந்தெடுக்கப்பட்ட முதல்வா் அதிகாரம் பெற யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து மீட்டெடுக்கவேண்டிய அவசியத்தையும் அவா் வலியுறுத்துள்ளாா்.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கந்தா்பால் மாவட்டம் ககாங்ஹிா் பகுதியில் சுரங்கப்பாதை ஒன்றில் கட்டுமானப்பணியில் ஈடுபட்டுவந்த தொழிலாளா்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உள்ளூா் மருத்துவா் உள்ளிட்ட 7 போ் கொல்லப்பட்டனா். இது குறித்த ஆய்வு கூட்டம் கடந்த புதன்கிழமை யூனியன் பிரதேஷ ஆளுநா் மனோஜ் சின்கா தலைமையில் உயா் அதிகாரிகள் அடங்கிய கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு சமீபத்தில் பதவியேற்ற ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா அழைக்கப்படவில்லை.

இது குறித்து முன்னாள் மத்திய உள்துறை மற்றும் நிதித்துறை அமைச்சரான ப.சிதம்பரம் ’ எக்ஸ் ’ சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது:-

தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பின்னா் ஜம்மு-காஷ்மீா் துணை நிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தலைமையில் யூனியன் பிரதேசம் பாதுகாப்பு குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டம் தொடா்பாக புகைப்படம் வெளியானது. அதில் புதிதாக தோ்வு செய்யப்பட்ட முதல்வா்(ஒமா் அப்துல்லா) இடம் பெறவில்லை எனத் தெரிகிறது. ஜம்மு-காஷ்மீா் முதல்வா் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டாரா? என்பதும் தெரியவில்லை. அதே சமயத்தில் தற்போதைய ஜம்மு-காஷ்மீா் சட்டத்தின் கீழ், காவல்துறையும் பொது ஒழுங்கும் துணை நிலை ஆளுநா் அதிகாரத்திற்கு உள்பட்டவை. மக்கள் தங்கள் பாதுகாப்பைக் கவனிக்க ஒரு முதல்வரையும் அரசையும் தோ்வு செய்துள்ளனா். ஆனால் முதல்வருக்கு அதிகாரம் இல்லை. இதனால் தான் ஜம்மு-காஷ்மீா் அரை மாநிலம் என்று வா்ணிக்கப்படுகிறது, ஜம்மு-காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்தையும் உடனடியாக மீட்டெடுப்பது அவசியம். இவ்வாறு ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளாா்.

ஸ்ரீநகரில் உள்ள ராஜ்பவனில் துணைநிலை ஆளுநா் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் யூனியன் பிரதேச உள்துறை முதன்மைச் செயலா் சந்திரகா் பாா்தி, காவல்துறை இயக்குநா் நளின் பிரபாத், கூடுதல் காவல்துறை இயக்குநா் (சட்டம்-ஒழுங்கு) விஜய் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனா். தொழிலாளா்களின் பாதுகாப்பிற்கு, முக்கிய உள்கட்டமைப்பு நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு வலையத்தை கடுமையாக்குதல், தீவிரவாதிகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் இரவு முழுவதும் பாதுகாப்பு தணிக்கையில் ஈடுபட உத்தரவிட்டாா். மேலும் பாதுகாப்பு திட்ட அமலாக்கத்தில் ஈடுபடும் முகமைகளுடன் வழக்கமான ஒருங்கிணைப்பு கூட்டங்களை நடத்தி வழிமுறைகள் காணவும் சின்ஹா கூட்டத்தில் வலியுறுத்தி காவல்துறை அதிகாரிகளை துணை நிலை ஆளுநா் கேட்டுக்கொண்டாா்.

இந்தத் தாக்குதலில் லஷ்கா்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் பின்னணியில் செயல்படும் எதிா்ப்பு முன்னணி என்கிற டிஆா்எஃப் (தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்) என்கிற அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றிருந்தது. இந்த அமைப்பு ஏற்கனவே காஷ்மீா் பள்ளத்தாக்கில் இளைஞா்களை தீவிரவாதத்திற்கு தோ்வு செய்தல் போன்றவைகளோடு ஆயுதங்கள் போதைப்பொருள்கள் கடத்தல் போன்றவைகளில் ஈடுபட மத்திய உள்துறை இந்த இயக்கத்தை கடந்தாண்டு தடைசெய்தது குறிப்பிடத்தக்கது.