அரசு போக்குவரத்துக் கழகத்தில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதால் மின் கட்டணம் போல பேருந்து கட்டணமும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது:-
மூடப்பட்டது 500 மதுக் கடைகளாக இருந்தாலும் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 600 மன மகிழ் மன்றங்கள் தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டுள்ளது. எஃப்எல் 2 என்ற பெயரில் அரசின் உரிமம் பெற்றால் யார் வேண்டுமென்றாலும் மது விற்பனை செய்யலாம். இதற்கு திமுக அரசு பல சலுகைகள் வழங்குகிறது. மனமகிழ் மன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே மது விநியோகிக்க வேண்டும் என்ற விதி தற்போது காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.
பெட்டிக்கடைகள் வைக்கக்கூட வசதி இல்லாத இடத்திலும் மனமகிழ் மன்றங்கள் திறக்கப்பட்டுள்ளது. முந்தையை ஆட்சியோடு சேர்த்து தற்போது 1,500 மனமகிழ் மன்றங்களை திறந்து வைத்துக்கொண்டு படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்பது ஏமாற்று வேலை. கடந்த தீபாவளிக்கு ரூ.467 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் கூடுதலாக தற்போது கடந்த ஆண்டை விட 20 விழுக்காடு விற்க வேண்டும் என வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு முன்னும் பின்னும் 3 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட வேண்டும். 1,500 மனமகிழ் மன்றங்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற யோசனை ஆபத்தானது. ஆந்திராவில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகள் 31 ஆக குறைக்கப்பட உள்ளதை எதிர்த்து மத்திய அரசிடம் போராட வேண்டும்.
இப்போதே தரமான கல்வி, மருத்துவம் வழங்க இயலவில்லை. தமிழகத்தில் மக்கள் தொகை கட்டுப்பாட்டுப் பணிகள் இப்போது உள்ளது உள்ளபடியே இருக்க வேண்டும். ஓசூரில் டாடா நிறுவனத்தில் பணியாற்றிய 800 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. திமுக அளித்த 75 சதவீத வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இதற்கான சட்டத்தை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்.
தீபாவளி உள்ளிட்ட விடுமுறை நாட்களில் அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது புதிய ஊழலுக்கு வழிவகுக்கும். ஒரு தனியார் பேருந்து நாளொன்றுக்கு 600 கி.மீ இயக்கப்பட்டால் 1,000 பேருந்துகளை இயக்கப்படும்போது போக்குவரத்து கழகத்திற்கு ரூ.1.14 கோடி இழப்பு ஏற்படும். மின்வாரியம் தனியாரிடம் மின்சாரம் வாங்குவதில் கமிஷன் கிடைப்பது போல தனியார் பேருந்துகளை இயக்குவதால் கமிஷன் கிடைக்கும். அதேபோல மின் கட்டணத்தைப் போல் பேருந்து கட்டணமும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.
அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்ட போதிலும் 17 முதல் 30 மாதங்களுக்கு நிலுவை தொகை வழங்கப்படவில்லை. முதல்வர் தலையிட்டு ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் தற்காலிக, பகுதி நேர, ஒப்பந்த பணியாளர்களுக்கு ஒரு வாரம் முன்பாக இன்றோ, நாளையோ முன்கூட்டியே ஊதியம் வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு போனஸ் வழங்கப்படுவதில்லை.
வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்ட மருதுபாண்டியர்களின் 223-ம் ஆண்டு நினைவு நாளை போற்றுவோம். பேரிடர் காலத்தில் முன் களப்பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு தீபாவளிக்கு ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
தொடர்ந்து பாமக பொருளாளர் திலகபாமா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சென்ற வாரம் நாங்கள் இலங்கை சென்று கைது செய்யப்பட்ட மீனவர்களை சந்தித்து பேசிவிட்டு இந்திய தூதரகத்திலும் விசாரித்தோம். அப்போது, இந்தியா சார்பில் வழக்கறிஞர்கள் கூட நியமிக்கப்பட இல்லை எனத் தெரியவந்தது. தமிழக மீனவர்கள் குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை. இது குறித்து தமிழக எம்பி-க்களும் பேசுவதில்லை. இலங்கை கடற்படையால் 162 மீனவர்களுக்கு மேல் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். படகு பழுதடைந்தாலும் அது நீரோட்டத்தில் இலங்கை எல்லைக்குள் நுழைய வாய்ப்புள்ளது. எனவே, இலங்கையுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கேரள மீனவர்களுக்குக் கிடைக்கும் பாதுகாப்பு தமிழக மீனவர்களுக்கு இல்லை. இவ்வாறு திலகபாமா கூறினார்.