திருவனந்தபுரம் தேர்வு வாரியத்தோடு மதுரை ரயில்வே கோட்டம் இணைப்பு: வைகோ கண்டனம்!

தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் வகையில் திருவனந்தபுரம் தேர்வு வாரியத்தோடு மதுரை ரயில்வே கோட்டத்தை இணைப்பதை இந்திய இரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று வைகோ கூறியுள்ளார்.

இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

மதுரை ரயில்வே கோட்டத்தை திருவனந்தபுரம் தேர்வு வாரியத்துடன் இணைப்பதன் விளைவாக தமிழர்களின் வேலைவாய்ப்பு கேரள இளைஞர்கள் வசம் செல்ல வாய்ப்புள்ளது என அக்.22 அன்று தினசரி தமிழ் நாளிதழில் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. ரயில்வே நிர்வாகத்தின் இச்செயல் கடும் கண்டனத்துக்குரியது. இது குறித்து ஏற்கனவே நான் பலமுறை ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்தும், நாடாளுமன்றக் கூட்டத்திலும் வலியுறுத்தினேன். நல்ல முடிவு எடுப்பதாக அப்போது உறுதி அளிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட தென்னக ரயில்வே பொது மேலாளர் உடனான கூட்டத்தில் இதுகுறித்து விவாதித்தேன். அப்பொழுதும் நல்ல முடிவினை தெரிவிப்பதாக பொது மேலாளர் கூறினார். மேலும், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன்திருமலைகுமார் சட்டமன்றத்தில் தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

கடந்த 2003-ம் ஆண்டு சேலம் கோட்டம் உருவானபோது, மதுரை கோட்டத்தில் இருந்த பொள்ளாச்சி ரயில் நிலையத்தை பாலக்காடு கோட்டத்துடன் இணைத்தனர். இதனைக் கண்டித்து அப்போதே கடுமையான போராட்டங்களை நடத்தி, தடுத்து நிறுத்த ஏற்பாடு செய்தோம். ஆனால் அப்போது இருந்த மத்திய அரசு அதனை ஏற்காமல், பொள்ளாச்சி ரயில் நிலையத்தை பாலக்காடு கோட்டதோடு இணைத்தது. மதுரைக் கோட்டத்தோடு பொள்ளாச்சி ரயில் நிலையத்தை இணைப்பதற்காக தொடர்ந்து போராடி வருகிறோம். எனவே மதிமுக எப்போதும் தமிழர்களையும், தமிழர் நலம் சார்ந்த செயல்களிலும் கூடுதல் கவனம் எடுத்து போராடி வருகிறது.

இதுபோக, கரிவலம்வந்தநல்லூரில் மீண்டும் ஒரு ரயில் நிலையம் அமைக்க வேண்டும், தென்தமிழகத்தின் கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி, விருதுநகர் போன்ற தொழில் மற்றும் வியாபார நகரங்களிலிருந்து பெங்களூரு மற்றும் சென்னை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு நாள்தோறும் காலை வேளையில் இரயில் மற்றும் கூடுதல் ரயில்களை இயக்க வலியுறுத்தி வருகின்றோம். தொடர்ந்து மக்கள் நலன் சார்ந்த செயல்களில் மதிமுக சமரசமின்றி போராடி வருகின்றது. தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் வகையில் திருவனந்தபுரம் தேர்வு வாரியத்தோடு மதுரை ரயில்வே கோட்டத்தை இணைப்பதை இந்திய இரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.