நாங்களும் ஆட்சிக்கு வர முயற்சி எடுத்து வருகிறோம்: செல்வபெருந்தகை!

“நாங்கள் சத்திரம், சாவடி நடத்த காங்கிரஸ் கட்சியை ஆரம்பிக்கவில்லை. நாங்களும் ஆட்சிக்கு வர முயற்சி எடுத்து வருகிறோம். காமராஜர் ஆட்சி தான் எங்களது நோக்கம்” என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை கூறியுள்ளார்.

இது தொடர்பாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் செல்வபெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மருது சகோதரர்கள் நினைவு தினத்தை இன்னும் சிறப்பாக நடத்த வேண்டும். மருது சகோதரர்களின் வரலாற்றை இன்றைய தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும். தமிழகத்தில் முதல்வர் முடிந்தவரை சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். சட்டம் – ஒழுங்கும் சரியாகத்தான் உள்ளது. ஆட்சியை குறை சொல்வது சுலபம். ஆள்பவர்களுக்குத் தான் வலியும், வருத்தமும் தெரியும்.

காங்கிரஸை பொறுத்தவரை, முதல்வர் நல்லாட்சி கொடுத்து வருகிறார். வருகிற 2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் என்பதை தமிழிசை முடிவு செய்ய முடியாது; மக்கள் தான் முடிவு செய்வர். காங்கிரஸ் போராட்டத்தை குறைக்கவில்லை. ஆர்எஸ்எஸ், இந்துத் துவாக்கு எதிராக இண்டியா கூட்டணி சார்பில் கூட்டம் நடத்தினோம். அனைத்து மாவட்டங்களிலும் நடத்த உள்ளோம். எங்களது கூட்டணிக் கட்சி ஆட்சியில் உள்ளது. அவர்களை விமர்சனம் செய்தால் தான் போராட்டம், அமைதியாக இருந்தால் போராடவில்லை என்று சொல்ல முடியாது.

இந்த ஆட்சியில் மக்களுக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். சத்திரம், சாவடி நடத்த காங்கிரஸ் கட்சியை ஆரம்பிக்கவில்லை. நாங்களும் ஆட்சிக்கு வர முயற்சி எடுத்து வருகிறோம். காமராஜர் ஆட்சி தான் எங்களது நோக்கம். ஹரியாணா தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் குறைபாடு இருந்துள்ளது. நாங்களும் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும். இதில் எங்களுடைய குறைபாடும் உள்ளது. வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி அமோகமாக வெற்றி பெறுவார். தமிழ், திராவிடத்துக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் திராவிடம் விடுபட்டதுக்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு செல்வபெருந்தகை கூறினார்.