துணை முதல்வர் உதயநிதியை டிஸ்மிஸ் செய்வாரா முதல்வர்?: எச்.ராஜா!

தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்ட விவகாரத்தில் துணை முதல்வரை டிஸ்மிஸ் செய்வாரா முதல்வர்? என பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று (அக். 27ம் தேதி) நடைபெற்றது. மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமை வகித்தார். மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா பங்கேற்று சிறப்புரையாற்றினார். அதன்பின் செய்தியாளர்களிடம் எச்.ராஜா கூறியதாவது:-

தேசியமும், தெய்வீகமும் நாட்டின் கலாச்சாரமாக உள்ளது. கலாச்சாரத்தை போற்றும் வகையில் நம் முன்னோர்களான மருது சகோதரர்கள் இருந்தனர். அவரது நினைவு நாளில் அவர்களை போற்றுவது நம் கடமையாகும். தமிழகத்தை பொறுத்த மட்டில் விடுதலைச் சிறுத்தைகள் என்ற அமைப்பு ஒரு வன்முறை அமைப்பு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கரூரில் பாஜக பொதுக்குழுவை எதிர்த்து பாஜக நிர்வாகிகளை விசிகவினர் தாக்க முற்பட்டனர். கரூரில் நேற்று ஒரு செல்போன் கடையில் இந்தி எழுத்துகள் எழுதப்பட்டிருந்ததை விசிகவினர் அழித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறது.

முன்னாள் ஆளுநரும், பாஜக தலைவருமான தமிழிசையை கூட மயிலாடுதுறையில் விசிகவினர் தாக்கியுள்ளனர். மது ஆலை உரிமையாளர்களை வைத்து கொண்டு மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட் டது. விசிக ஒரு வன்முறை கும்பல். அந்த வன்முறை கும்பலை திமுக அருகிலேயே வைத்திருப்பது திமுகவுக்கு இழுக்கு.

பொதிகை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தில் ஒரு வரி விடுபட்டதற்கு தமிழக ஆளுநரை திரும்பப் பெறவேண்டும் என முதல்வர் தெரிவித்தார். தற்போது துணை முதல்வர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளது. துணை முதல்வரை முதல்வர் டிஸ்மிஸ் செய்வாரா?

மனுநீதி சோழன் போல துணை முதல்வர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய கட்சி தொடங்கி மாநாடு நடத்தும் விஜய்க்கு வாழ்த்துகள். அவர் கட்சி கொள்கைகளை அறிவித்தப்பிறகு விமர்சனம் செய்யலாம். சீமான் ஒரு பொழுதுபோக்கு நபர். அவர் கூறுவதைக் கேட்டு சிரித்துவிட்டு விடலாம். பாஜக மாநில அமைப்பு தேர்தல் நிறைவடைந்தவுடன் கோயில்களில் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து கட்டணமில்லா கோயில் தரிசனம் கொண்டு வர ஒரு விழிப்புணர்வு இயக்கத்தை பாஜக தொடங்க இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.