தமிழ்நாடு அரசு வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்துள்ளது.
சமீப காலமாக, காலநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக சில இடங்களில் அதிக மழைப்பொழிவு ஏற்படுகிறது, சில இடங்களில் வறட்சியான வானிலையால் தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படுகிறது. மேலும், பனிப்பாறைகள் உருகுவதால் கடல் நீர் மட்டம் உயருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இதனால், சில தீவுகளும் நீருக்குள் மூழ்குவதையும் பார்க்க முடிகிறது.
இந்த தருணத்தில், காலநிலை மாற்றத்தை தடுக்க, வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் உள்ள நாடுகள் ஈடுபடுவது கட்டாயமாகும். மேலும், சமீப காலங்களில் வெப்ப அதிகரிப்பானது அதிகரித்து வரும் நிலையில் , பொதுமக்களும் வெப்ப அலையில் சிக்கி பாதிப்புக்கு உள்ளாவதை பார்க்க முடிகிறது. மேலும், சில இடங்களில் மக்கள் உயிரிழப்பும் ஏற்படுவதை பார்க்க முடிகிறது.
இந்நிலையில் வெப்ப அலையை மாநில பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வெப்ப அலையில் சிக்கி உயிரிழப்போரின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான மருத்துவ வசதிகள், ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்க, பேரிடர் நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம். வெப்ப அலை தாக்கத்தின்போது தண்ணீர் பந்தல்கள் அமைத்து குடிநீர் வழங்குவதற்கும் பேரிடர் நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.