நடிகரின் முதல் மாநாடு பேச்சை வைத்து எந்த கருத்தையும் கூற முடியாது: வானதி சீனிவாசன்

தமிழகத்தில் புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகரின் முதல் மாநாடு பேச்சை வைத்து கொண்டு எந்த கருத்தையும் கூற முடியாது. எதிர்வரும் நாட்களில் அவரது செயல்பாடுகளை வைத்து தான் கருத்து கூற முடியும் என வானதி சீனிவாசன் கூறினார்.

தீபாவளியை முன்னிட்டு தாயின் அரவணைப்பில் மட்டும் வளரும் பெண்குழந்தைகளுக்கான ‘மோடியின் மகள்’ திட்டத்தின் கீழ் புத்தாடை, இனிப்பு மற்றும் பட்டாசுகள் வழங்கும் நிகழ்ச்சி கோவை, வடகோவை பகுதியில் அமைந்துள்ள குஜராத் சமாஜ் வளாகத்தில் நேற்று திங்கள்கிழமை மாலை நடந்தது. பாஜக தேசிய மகளிரணி தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் மற்றும் நடிகை ராதிகா சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பெண் குழந்தைகளுக்கு தீபாவளி பரிசு பொருட்களை வழங்கினர்.

நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன் பேசும்போது, “இன்றைய பெண்களுக்கு முன்னோடியாக வாழ்க்கை வழிகாட்டியாக ராதிகா சரத்குமார் உள்ளார். அவரும் அவரது கணவர் சரத்குமார் இருவரும் பாஜக-வில் இணைந்து கடந்த மக்களவை தேர்தலில் மிக சிறப்பாக பணியாற்றினர். கட்சிக்கு தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். ‘மோடியின் மகள்’ திட்ட குழந்தைகளின் கல்வியை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தேவையான உதவிகள் செய்து தரப்படும்” என்றார்.

ராதிகா சரத்குமார் பேசும் போது, “தனிப்பட்ட முறையில் பெண் குழந்தைகளை வளர்ப்பது எத்தகைய சவால் நிறைந்தது என்பதை நான் அறிவேன். நீங்கள் சிங்கம் போல் செயல்பட வேண்டும். மகள்களுக்கு சிறப்பான வழியை காட்ட வேண்டும். உண்மை உங்களிடம் இருந்தால் வெற்றி நிச்சயம்” என்றார்.

தொடர்ந்து வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கோவை மக்கள் சேவை மையம் சார்பில் 5 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட தாயின் அரவணைப்பில் மட்டும் வாழும் பெண் குழந்தைகளை தத்தெடுத்து ‘மோடியின் மகள்‘ திட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை ரூ.10 ஆயிரம் மற்றும் பல உதவிகளை செய்து வருகிறோம்.

இந்தியாவில் அதிக இளைஞர்கள் கொண்ட கட்சியாக பாஜக உள்ளது. தமிழகத்தில் நடிகர் ஒருவர் புதிதாக கட்சி தொடங்கியுள்ளார். மாநாட்டு பேச்சை வைத்து கொண்டு எந்த கருத்தையும் கூற முடியாது. எதிர்வரும் நாட்களில் அவரது செயல்பாடுகளை வைத்து தான் கருத்து கூற முடியும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இணைக்கும் கட்சி பாஜக மட்டும் தான். ஆர்எஸ்எஸ் வழி சார்ந்து நடக்கும் எங்களை போன்ற கட்சிக்கு பிறப்பின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு எப்போதும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

நடிகை ராதிகா சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசும் போது, விஜய் தனியாக கட்சியை தொடங்கியிருப்பதற்கு என்னுடைய மனதார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருமே அரசியலுக்கு மக்களுக்கு நன்மை செய்யத்தான் வருகிறார்கள். அதை அவர்களுடைய கொள்கைகளுக்கு ஏற்ப செய்வது நல்லது தான். தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த நட்சத்திரமாக திகழ்ந்து வரும் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று முடிவு செய்தது மிகச் சிறந்த முடிவு தான். சிறுவயதில் இருந்து எனக்கு விஜய் தெரியும், அவருடைய தந்தையின் இயக்கத்தில் நான் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். ஆகையால் இன்று அவர் இந்த வயதில் இப்படி ஒரு முடிவை எடுத்து இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

மேலும் திமுகவை நேரடியாகவும், அதிமுகவைப் பற்றி எதுவும் பேசாமலும், பாஜகவை மறைமுகமாகவும் தாக்கி விஜய் பேசியது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அவர் யோசித்து தான் அனைத்து விஷயங்களையும் பேசுவார். அப்படித் தான் திமுகவை நேரடியாக எதிர்த்து பேசி இருக்கிறார். ஆனால் பாஜகவை எதிர்த்து பேசுவதற்கு முன் கட்டாயம் அவர் யோசித்து தான் பேசுவார். அதிமுகவை பற்றி அவர் ஏன் பேசவில்லை என்பது எனக்கு தெரியவில்லை. அரசியலை அவர் வேறு விதமாகத்தான் பார்த்து வருகிறார். தெறி படத்தில் அவரோடு நான் நடித்திருக்கிறேன், அவர் பொதுவெளியில் பெருசாக பேசக்கூட மாட்டார். ஆனால் நேற்று நடந்த அந்த மாநாட்டு மேடையில் அவர் அவ்வளவு ஆக்ரோஷமாக பேசியது எனக்கு ஆச்சரியங்களை தந்திருக்கிறது. அடுத்து தனது கட்சிக்காரர்களை அடையாளம் காட்டி என்ன செய்யப்போகிறார் என்பதை பார்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.