தவெக மாநாட்டுக்கு வந்தபோது பலியான 6 பேரின் குடும்பத்தினருக்கு விஜய் இரங்கல்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் பங்கேற்கச் சென்ற போது சாலை விபத்துகளில் உயிரிழந்த 6 பேருக்கும் தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று முன்தினம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை பகுதியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தவெக தலைவர், முதன் முதலாக அரசியல் உரை ஆற்றினார். இந்த மாநாட்டில் கலந்து கொள்ள தமிழ்நாடு முழுவதும் இருந்து தவெக நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் என லட்சக்கணக்கானோர் திரண்டனர். விஜய் கட்சியின் மாநாட்டிற்காக சென்னையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் புறப்பட்ட இளைஞர்கள் சாலை விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. அதேபோல, திருச்சி மாவட்டத்தில் இருந்து மாநாட்டுக்கு காரில் சென்ற தவெக நிர்வாகிகளும் விபத்தில் சிக்கி பலியாகினர். திருச்சியை சேர்ந்த தவெக நிர்வாகி கலைக்கோவன் உடலுக்கு தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக திருச்சி வந்தார். அஞ்சலி செலுத்திய பின்பு அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். கலைக்கோவனின் உறவினர்கள் உயிரிழந்த நிர்வாகிகளின் இறப்புக்கு விஜய் இரங்கல் தெரிவிக்காததற்கு கண்டனம் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய், தவெக மாநாட்டுக்கு வருகை தந்தபோது விபத்துகளில் சிக்கி பலியானோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். விஜய் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

நமது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக, விக்கிரவாண்டி வி.சாலை நோக்கி வரும் போது, எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த கழகத் தோழர்கள், வழக்கறிஞர் கில்லி VL.சீனிவாசன், திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் JK.விஜய்கலை, திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் வசந்தகுமார், கழகத் தோழர் பாரிமுனை, சென்னை ரியாஸ், சென்னை உதயகுமார், கழகத் தோழர், செஞ்சி மற்றும் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சார்லஸ் கழகத் தோழர், வில்லிவாக்கம், சென்னை ஆகியோர் இன்று நம்மிடையே இல்லை என்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

ஈடு செய்யவே இயலாத, தாங்கொணாத் இத்துயரில் இருந்து வெளிவரவே இயலாமல் மனம் தவிக்கிறது. கழகத்திற்காக இவர்கள் ஆற்றிய பணிகள் கழக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். கழகத் தோழர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன். மேலும், சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கழகத் தோழர்கள் விரைவில் முழுவதும் குணமடைந்து, வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.