“தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றுகிறேன்” என்று எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
நாடு விடுதலை பெற்ற பின், 1956-ம் ஆண்டு நவ.1-ம் தேதி நாடுமுழுவதும் மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன. அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. அவ்வாறு பிரிந்தபோது, தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை மீண்டும் தமிழகத்துடன் இணைக்க நடந்த போராட்டங்களில் பலர் ஈடுபட்டு உயிர்நீத்தும், சிறை சென்றும் தியாகம் செய்துள்ளனர். போராட்டங்களில் ஈடுபட்டு, தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் வகையில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1-ம் நாளை எல்லைப் போராட்ட தியாகிகள் நாளாக தமிழக அரசுஅனுசரிக்கிறது.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள், நவம்பர் 1! தமிழர் வாழும், தமிழ் பேசப்படும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காகப் போராடிய அனைவரையும் எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளில் போற்றி வணங்குகிறேன்! இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.