தமிழ்நாடு, கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் முற்போக்கு சிந்தனை பரந்து விரிந்துள்ளது. பாஜகவின் ஒரே மொழி, ஒரே தேர்தல் திட்டங்களை தமிழ்நாடும், கேரளாவும் இணைந்து எதிர்க்க வேண்டும் என்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேரளாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
மலையாள மனோரமா நடத்திய இலக்கிய கலாச்சார நிகழ்ச்சியில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இன்று கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-
தமிழ்நாட்டின் திராவிட அரசியல் முன்னெடுப்பு என்பது மொழி உணர்வையும், பண்பாட்டு உணர்வையும் மையப்படுத்தியது. தமிழ்நாட்டின் ஆழமான மொழி மற்றும் பண்பாடு அடிப்படையிலான வரலாறு, அதன் சமூக அரசியலுக்கு அடித்தளமாகவும் விளங்கி வருகிறது. மொழி, இலக்கியம் மற்றும் அரசியலின் அடிப்படையில், தமிழ்நாட்டிற்கும் கேரளத்திற்கும் இணக்கமான வரலாறு உண்டு.
1924ஆம் ஆண்டு கேரளத்தில் நடந்த வைக்கம் போராட்டத்தை முன்நின்று நடத்தி வெற்றி பெற்றார் தந்தை பெரியார். அதேபோல, கேரளாவில் பிறந்த டி.எம்.நாயர், தமிழ்நாட்டில் நீதிக்கட்சியின் தொடக்கப்புள்ளியாக இருந்த தென் இந்திய நல உரிமைச் சங்கத்தை தொடங்கினார். அது தமிழ்நாட்டில் பெரிய அரசியல் எழுச்சியை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாகவே, தற்போது இந்தியாவின் வளர்ச்சி பெறும் மாநிலங்களில் முன்னணி இடத்தை தமிழ்நாடும், கேரளமும் பெற்று வருகிறது. இரு மாநிலங்களிலும் வெற்றிகரமான முறையில், பாசிச – வகுப்புவாத நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையிடப்பட்டு வருகின்றன. திராவிடம் என்பது தமிழக கலாசாரத்தின் பெருமை. தமிழ்நாடும், கேரளாவும் நீண்ட ஆண்டுகளாக இணைந்து பயணிக்கின்றன.
தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் தோன்றுவதற்கு முன்பு, தமிழ் இலக்கிய பெருமை என்பது பக்தி, புராணம் சார்ந்ததாக தான் இருந்தது. ஆனால், எங்கள் தலைவர்களான அறிஞர் அண்ணா, கலைஞர் உள்ளிட்டோரின் முன்னெடுப்புகளால், பகுத்தறிவு மற்றும் அறிவியல் சிந்தனை சார்ந்த தமிழ் இலக்கியங்களின் புகழ் மேலோங்க தொடங்கின. தமிழ்நாட்டின் திராவிட இயக்கங்கள், தமிழ் மொழியை அடிப்படை அடையாளமாக வைத்து செயல்படத் தொடங்கியதற்கு காரணம், தமிழ் மொழி என்பது வெறும் தகவல் பரிமாற்ற கருவியாக மட்டுமல்லாமல், பெருமை மிகுந்த தனித்துவத்தை நிலைநாட்டுவதாகவும் அமைந்துள்ளது தான். அதற்கான எடுத்துக்காட்டு தான் இந்தி திணிப்புக்கு எதிரான தமிழக மக்களின் நடவடிக்கைகள். எங்களுக்கு இந்தி மீது வெறுப்பு இல்லை. இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம்.
பாஜகவின் ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே தேர்தல் திட்டத்தை தமிழ்நாடும், கேரளாவும் இணைந்து எதிர்க்க வேண்டும். இந்தியாவில் தமிழகமும், கேரளாவும் தான், அதிக முற்போக்கு சிந்தனை கொண்ட மாநிலங்கள். தமிழக, கேரள மக்கள் பாசிச கொள்கையை எதிர்ப்பது ஏன் என்றால், இந்த இரு மாநிலங்களிலும் முற்போக்கு சிந்தனை பரந்து விரிந்துள்ளது. இந்தியாவில் மாநில மொழிகள் உயிரோடு இருக்கக் காரணமே திராவிட இயக்கம் தான். இவ்வாறு அவர் பேசினார்.