“பிரிவினை பேசி மக்களை தூண்டி விடத் துடிக்கும் வன்ம அரசியல் நாடகத்தை நடத்தும் இந்த நபரை மக்கள் அடையாளம் கண்டு கொண்டிருக்கிறார்கள். திமுகவின் தயவில்லாமல் அரசியல் செய்ய முடியாத இவரின் வாய்ச் சவடால் வெத்து வேட்டு” என பாஜக மாநில துணை செயலாளர் நாராயணன் திருப்பதி, விசிக தலைவர் திருமாவளவனை விமர்சித்துள்ளார்.
1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1 ஆம் தேதியை கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்கள் மாநில தினமாக கடைப்பிடித்து வருகின்றன. ஆனால் தமிழ்நாடு மட்டும், பேரறிஞர் அண்ணா தீர்மானம் நிறைவேற்றிய ஜூலை 18 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடி வருகிறது. தமிழ்நாடு நாள் என்றைக்கு கொண்டாடப்படுவது என்பது தொடர்பாக இங்கு அரசியல் கட்சிகளிடையே பெரியளவில் விவாதம் எழுந்துள்ள நிலையில் இந்நிலையில் நவம்பர் 1 ஆம் தேதியை ‘தமிழர் இறையாண்மை நாளாக’ கொண்டாட வேண்டும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:-
1956 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள் மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. எனவே ஆண்டுதோறும் நவம்பர் முதல் நாளை நமது அண்டை மாநில அரசுகளும் அம்மாநில மக்களும் ‘மாநிலம் உருவான நாளாக’ மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், இந்நாளை மகிழ்ச்சியாகக் கொண்டாட இயலாத நிலை. ஏனெனில், நிலபரப்பு அடிப்படையில் தமிழ்நாடு புதிதாக உருவான மாநிலம் அல்ல. தமிழ்நாட்டை மையமாகக் கொண்ட சென்னை மாகாணத்திலிருந்து மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது பல பகுதிகளை நாம் அண்டை மாநிலங்களுக்கு இழக்க நேர்ந்துவிட்டது. எனவே இந்த நாள் நமக்கு இழப்பு ஏற்பட்ட நாள். எனினும் தமிழர்களின் அதிகாரப்பூர்வமான ‘உரிமை நிலமாக’ எல்லை வரையறைகளைப் பெற்றது. எனவே, இந்த நாளை “தமிழர் இறையாண்மை நாளாக” விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கருதுகிறது. கடந்த 1956 ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டதையொட்டி மாநிலம் உருவான பொன்விழா 2006 ஆம் ஆண்டு நடந்தது. அதற்கு முன்பாக அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சந்தித்து இனியாவது ஒவ்வொரு ஆண்டும் நாமும் நவம்பர் 1ஆம் நாளை நமது அண்டை மாநிலங்களைப் போல “மாநில நாளைக்” கடைபிடிக்கலாம் என்று கேட்டோம். “நாம் நமது நிலப்பகுதிகளை இழந்திருக்கிறோம். அதை எப்படிக் கொண்டாடுவது? அதனால் தான் அந்த நாளை எல்லைப் போராட்ட ஈகியர் நாளாக நாம் கடைப்பிடிக்கிறோம்” என்று அவர் விளக்கம் அளித்தார்.
அவர் கூறியது உண்மைதான் எனினும் இனிமேல் தமிழ்நாட்டிலிருந்து பறிபோன நிலப் பகுதிகளை மீட்பதற்கு வாய்ப்பில்லை; நம்மிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்போம் என்கிற அடிப்படையில் இந்நாளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ‘தமிழர் இறையாண்மை நாள்’ என அறிவித்து அதனைக் கடைப்பிடித்து வருகிறோம். அதாவது, ஒன்றிய அரசால் பறிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை மீட்பதற்கு உறுதி ஏற்கும் நாளே இந்தத் தமிழர் இறையாண்மை நாளாகும். இதுவரை ஒன்றிய அரசால் பறிக்கப்பட்ட தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுப்பதும், அதற்குத் தமிழர் இறையாண்மை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதும் இன்றியமையாததாகும். அதன்மூலம் தமிழர் இறையாண்மையைப் பாதுகாக்கவும் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கவும் இந்நாளில் உறுதியேற்போம்” என்று கூறியுள்ளார் திருமாவளவன்.
திருமாவளவனுக்கு பதிலடியாக பாஜக மாநில துணை செயலாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
“தமிழர்களின் அதிகாரப்பூர்வமான ‘உரிமை நிலமாக’ எல்லை வரையறைகளைப் பெற்ற நாளான நவம்பர் 1-ஐ ‘தமிழர் இறையாண்மை நாளாக’ விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கருதுகிறது. ஒன்றிய அரசால் பறிக்கப்பட்ட தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுப்பதும், அதற்குத் தமிழர் இறையாண்மை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதும் இன்றியமையாததாகும். அதன்மூலம் தமிழர் இறையாண்மையைப் பாதுகாக்கவும் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கவும் உறுதியேற்போம்” என விசிக தலைவர் திருமாவளவன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எதிர்மறையாக பேசி மற்றவர்களின் கவனத்தை தன் மேல் திருப்ப முயற்சிக்கும் மலிவான, கேடுகெட்ட அரசியல். இந்தியா தன்னுடைய நிர்வாக வசதிக்காக மாநிலங்களை வரையறுத்துள்ளதோடு, அதற்கென பல கடமைகளை பணித்துள்ளது என்பது தெரிந்தும் பிரிவினை பேசி மக்களை தூண்டி விடத் துடிக்கும் வன்ம அரசியல் நாடகத்தை நடத்தும் இந்த நபரை மக்கள் அடையாளம் கண்டு கொண்டிருக்கிறார்கள். திமுகவின் தயவில்லாமல் அரசியல் செய்ய முடியாத இவரின் வாய் சவடால் வெத்து வேட்டு. தமிழகத்தின் உரிமைகளை பாதுகாப்பது இந்திய இறையாண்மை என்பதை இந்திய அரசியலமைப்பு சட்டம் தெளிவாக்குகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.