உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 2-வது இடத்துக்கு சறுக்கியுள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரையும் முழுமையாக கைப்பற்றியது.
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 2-வது இடத்துக்கு சறுக்கியுள்ளது. இந்திய அணியின் வெற்றி சதவிகிதம் 62.82 சதவிகிதத்திலிருந்து 58.33 சதவிகிதமாக குறைந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி 62.50 சதவிகித வெற்றிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. 55.56 சதவிகித வெற்றிகளுடன் இலங்கை அணி மூன்றாவது இடத்திலும், 54.55 சதவிகித வெற்றிகளுடன் நியூசிலாந்து அணி நான்காவது இடத்திலும், 54.17 சதவிகித வெற்றிகளுடன் தென்னாப்பிரிக்க அணி ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
முதலிடத்தில் வலுவான நிலையில் இருந்த இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முடிவில் அதன் இடத்தை ஆஸ்திரேலியாவிடம் இழந்துள்ளது. இந்த நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தரவரிசையில் முதல் இரண்டு இடங்களுக்குள் நீடிக்க இரு அணிகளுக்கும் பார்டர் – கவாஸ்கர் தொடரை வெல்வது இன்றியமையாததாக மாறியுள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான வரலாற்று தோல்விக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு பத்திரிகையாளர்களிடம் கேப்டன் ரோஹித் சர்மா பேசியதாவது:-
நியூசிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடர் தோல்வி, எனது கிரிக்கெட் பயணத்தில் மிகவும் மோசமானது. இந்த தோல்விக்கான முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். இந்த தோல்வியை ஏற்றுக் கொள்வதற்கு மிகவும் கடினமாக இருக்கிறது. இந்த தோல்வியை எங்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
நாங்கள் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்த தொடர் முழுவதும் நியூசிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டது. இந்த தொடரில் நாங்கள் நிறைய தவறுகள் செய்துவிட்டோம். முதல் இரண்டு போட்டிகளின் முதல் இன்னிங்ஸில் எங்களால் அணிக்காக அதிக அளவில் ரன்கள் குவிக்க முடியவில்லை. ஒரு அணியாக நாங்கள் முழுமையாக தோல்வியைத் தழுவியுள்ளோம்.
பேட்டிங்கில் சில திட்டங்களோடு களமிறங்கினேன். ஆனால், அவை எனக்கு கை கொடுக்கவில்லை. நாங்கள் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதற்கான முடிவு எங்களுக்கு கிடைத்துள்ளது. கேப்டனாக இந்த தொடரில் நான் சிறப்பாக செயல்படவில்லை. பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட தவறிவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை முழுமையாக இழப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.