சனாதனத்தை பாதுகாக்க புதிய அணி: துணை முதல்வர் பவன் கல்யாண்!

சனாதன தர்மத்தை பாதுகாக்க ஜனசேனா கட்சிக்குள் நரசிம்ம வராஹி படை என்ற புதிய அணியை தொடங்குவதாக அக்கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் அறிவித்துள்ளார். சனாதன தர்மத்தை சமூகவலைத்தளங்களில் இழிவு செய்பவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனசேனா கட்சியின் தலைவரும் ஆந்திர பிரதேச துணை முதல்வருமான பவன் கல்யாண், சனாதன தர்மத்தை காக்க தனது கட்சியில் புதிய அமைப்பை ஒன்றை தொடங்கியிருக்கிறார். இது தொடர்பாக பவன் கல்யாண் கூறியிருப்பதாவது:-

நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். ஆனால் நான் எனது நம்பிக்கையில் உறுதியாக இருக்கிறேன். சனாதன தர்மத்தை பற்றி சமூக வலைத்தளங்களில் அவமதிக்கும் வகையில் பேசினால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். சனாதன தர்மத்தை பாதுகாப்பதற்காக கட்சியில் நரசிம்ம வராஹி படை என்ற புதிய அணியை தொடங்கியிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டு இருந்தததாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரத்திற்கு சனாதன தர்ம விவகாரத்தை பவன் கல்யாண தீவிரமாக கையில் எடுத்துள்ளார். சனாதன தர்மம் மற்றும் அதன் நம்பிக்கைகளை இழிவுபடுத்துவதை தடுக்கும் வகையில், கடுமையான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என கடந்த மாதம் பவன் கல்யாண் கோரிக்கை விடுத்து இருந்தார். பவன் கல்யாண் கூறுகையில், “சனாதன தர்மத்தை காக்கவும் இழிவுபடுத்துவதை தவிர்க்கவும் கடுமையான தேசிய சட்டம் அவசியம். நாடு முழுவதும் உடனடியாக இதற்கான சட்டத்தை ஏற்ற வேண்டும்” என்றார்.

சனாதன தர்மம் விவகாரத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சீண்டும் வகையிலும் பவன் கல்யாண கடந்த மாத துவக்கத்தில் பேசியிருந்தார். பவன் கல்யாண் கூறுகையில், “சனாதனம் என்பது ஒரு வைரஸ் மாதிரி என்றும் அதை நாசம் செய்யவேண்டும் என்று தமிழகத்தில் ஒருவர் பேசியிருக்கிறார். இதை சொன்னவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். உங்களால் சனாதன தர்மத்தை அழிக்க முடியாது. சனாதன தர்மத்தை அழிக்க முயற்சித்தால், நீங்கள்தான் அழித்து போவீர்கள். உங்களைப் போல பலர் வந்து போய்விட்டார்கள். ஆனால் சனாதன தர்மம் அப்படியே தான் உள்ளது. மதச்சார்பின்மை என்பது ஒரு வழிப் பாதை கிடையாது. இருவழிப் பாதை. மரியாதை கொடுத்தால்தான் மரியாதை கிடைக்கும் . சனாதன தர்மத்தின் மீதான தாக்குதலை யாரும் ஒருபோதும் கண்டிப்பதில்லை. கண்டிக்காவிட்டாலும் தவறு தவறுதான்” என்று கூறியிருந்தார்.