‛‛கீழ்ப்பாக்கத்துல இருக்க வேண்டியவரை ஆளுநர் மாளிகையில் உட்கார வைத்து, அரை பைத்தியங்களை கொண்டு வைத்துவிட்டு சேட்டை பண்ணுவார்கள். இதனால் ஆளுநர் பதவியை முதலில் தூக்க வேண்டும்” என்று சீமான் காட்டமாக விமர்சனம் செய்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27 ம் தேதி விக்கிரவாண்டி வி சாலையில் நடந்தது. இந்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்று கட்சியின் கொடி விளக்கம், கொள்கைகளை வெளியிட்டார். அதோடு நடிகர் விஜய் பேசியபோது, ‛‛திராவிடமும், தமிழ் தேசியமும் தனது இருகண்கள்” என்று கூறினார். விஜயின் இந்த பேச்சால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கோபமடைந்துள்ளார்.
இந்நிலையில் சென்னையில் நேற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர்களை சந்தித்தார். நேற்றுமுன் தினம் தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை காட்டமாக விமர்சனம் செய்தது பற்றி பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது, ‛‛திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றாக முடியாது. இரண்டும் வெவ்வேறு. எங்களின் கொள்கைக்கு எதிராக வந்தால் அண்ணன், தம்பி யாராக இருந்தாலும் கொள்கை எதிரி தான்” என்பதை மீண்டும் உறுதியாக சொன்னார்.
இந்த வேளையில் பத்திரிகையாளர் ஒருவர், ‛‛ஆளுநர் பதவி வேண்டாம் என்று நடிகர் விஜய் சொல்லியுள்ளார். அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு சீமான் கூறியதாவது:-
அதனால் என்ன இருக்கிறது.. ஆளுநர் பதவி வேண்டாம் என்று அண்ணா சொன்னார். ஆட்டுக்கு தாடி.. நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை என்று அண்ணா சொன்னார். அதை தான் நாங்களும் சொல்கிறோம். நாங்களும் நீண்ட நாட்கள் வலியுறுத்தி வருகிறோம். ஆளுநர் பதவி வேண்டாம் என்று சொல்வதில் ஒன்றும் இல்லை. ஆளுநர் தேவையில்லை என்று விளக்கம் சொல்ல முடியுமா?. நான் சொல்கிறேன். மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு நாட்டின் முதலமைச்சருக்கு இல்லாத அதிகாரம். மக்களால் தேர்வு செய்யப்படாத ஒரு நியமன உறுப்பினருக்கு இருக்கிறது என்றால் இது என்ன ஜனநாயகம்? இந்த கேள்வி உங்களிடம் உள்ளதா? . சும்மா ஆளுநர் வேண்டாம் என்றால் ஏன் வேண்டாம்?. விளக்கம் சொல்ல வேண்டும்.
8 கோடி மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதி முக ஸ்டாலினுக்கு இல்லாத அதிகாரம், ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற கையெழுத்து இடுங்கள் என்று சொன்னால் ஒற்றை கையெழுத்தை இடாத தமிழ்நாட்டின் நலன் சார்ந்த பல சட்டங்கள், திட்டங்கள் உறங்குதா? இல்லையா?. இதில் மக்களாட்சி எங்க? மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு இல்லாத அதிகாரம்? நியமிக்கப்பட்ட ஒருவருக்கு உள்ளதா? அதுவும் பாஜக ஆள்கிறது என்றால் பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநரை வைத்து குடைச்சல் கொடுப்பது. அப்படித்தான் கிரண்பேடி அங்க(புதுச்சேரி) நாராயணசாமியை கடைசி வரை தூங்கவிடவில்லை. அப்படித்தானே. இங்க எல்லாம் பார்க்கிறீர்கள் ஆளுநர் ஆர்என்ரவி படுத்தும் பாட்டை. கீழ்ப்பாக்கத்துல இருக்க வேண்டியவரை ஆளுநர் மாளிகையில் உட்கார வைத்து, அரை பைத்தியங்களை கொண்டு வைத்துவிட்டு சேட்டை பண்ணுவார்கள். அதை முதலில் தூக்க வேண்டும். அதற்கு முதலில் காரணம் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.