சுப்ரீம் கோர்ட் மற்றும் நாட்டின் அனைத்து உயர் நீதிமன்றங்களிலும் இப்போது அலுவல் மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. இதை உறுதி செய்யும் அரசியல் சாசன சட்டம் பிரிவு 348-ஐ எதிர்த்து பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இருப்பினும், இந்த மனு தவறான நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி சுப்ரீம் கோர்ட் இதைத் தள்ளுபடி செய்துள்ளது.
நமது நாட்டில் 25 உயர் நீதிமன்றங்கள் உள்ளன. பெரும்பாலும் ஒரு மாநிலத்திற்கு ஒரு உயர் நீதிமன்றம் இருக்கிறது. அதேநேரம் 6 உயர் நீதிமன்றங்களுக்கு மட்டும் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் அதிகாரம் இருக்கிறது. அதேபோல நாட்டின் உச்சபட்ச நீதிமன்றமாக டெல்லியில் இருக்கும் சுப்ரீம் கோர்ட் கருதப்படுகிறது. இந்த உயர் நீதிமன்றங்கள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் இப்போது அலுவல் மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. இதனால் இந்த நீதிமன்றங்களில் விசாரணை ஆங்கிலத்திலேயே நடைபெறுகிறது. மேலும், நீதிமன்றங்களில் தீர்ப்புகளும் உத்தரவுகளும் கூட ஆங்கிலத்திலேயே வெளியிடப்படுகிறது.
நாட்டின் சுப்ரீம் கோர்ட் மற்றும் அனைத்து உயர் நீதிமன்றங்களிலும் ஆங்கிலம் தான் அலுவல் மொழியாக இருக்க வேண்டும் என்பதை அரசியல் சாசன சட்டம் பிரிவு 348 (1) உறுதி செய்கிறது. இந்த அரசியல் சாசன சட்டம் பிரிவு 348 (1) எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் இந்தியில் விசாரணை நடத்த அனுமதிக்கக் கோரி ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றம் மற்றும் அனைத்து உயர் நீதிமன்றத்திலும் நடக்கும் விசாரணைகள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று கூறும் அரசியலமைப்பின் 348(1)வது பிரிவினை எதிர்த்து இந்த ரிட் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அர்த்தமே இல்லாமல் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லி சுப்ரீம் கோர்ட் இதை டிஸ்மிஸ் செய்தது. நீதிபதிகள் மேலும் கூறுகையில், “இந்தி மொழியை மட்டும் ஏன் கேட்கிறீர்கள்.. உச்ச நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றங்களிலும் நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. அப்படி என்றால் அரசியல் சாசனத்தில் உள்ள அனைத்து அலுவல் மொழிகள் அனைத்திலும் விசாரணை நடத்த வேண்டி இருக்கும். அரசியலமைப்புச் சட்டத்தின் 348வது பிரிவை எதிர்த்து எப்படி மனு தாக்கல் செய்ய முடியும்? இது முதன்மையாக இயற்றப்பட்ட அரசியலமைப்பின் ஒரு பகுதி. அதை எதிர்த்து எப்படி வழக்கு தொடர்கிறீர்கள்” என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது வழக்கைத் தாக்கல் செய்த நபர் தான் குறைந்தபட்ச நிவாரணத்தை மட்டுமே கோருவதாகக் குறிப்பிட்டார். மேலும், இந்த மனு அடிப்படை உரிமைகள் தொடர்பானது என்றும் நீதிக்கான அணுகல் அனைவருக்கும் இருக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டே இந்த மனுவைத் தாக்கல் செய்து இருப்பதாக வாதிட முயன்றார். இருப்பினும், சுப்ரீம் கோர்ட் இந்த விவகாரத்தில் மேற்கொண்டு விசாரணை நடத்த முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டது. மேலும், இந்த மனுவை டிஸ்மிஸ் செய்தும் உத்தரவிட்டது.