நான்குனேரி பகுதியில் வீடு புகுந்து 17 வயது சிறுவனை வெட்டிய 10 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஒரு சமூகத்தை சேர்ந்த சிறுவனை மற்றொரு சமூகத்தை சேர்ந்த கும்பல் வெட்டியதால், நெல்லையில் பரபரப்பான சூழல் நிலவி வருகின்றது.
நெல்லை மாவட்டம், நான்குனேரி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட மேலப்பாட்டம் பகுதியை சேர்ந்தவர் இசக்கி துறை. இவருடைய 17 வயது மகன் மனோஜ் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகின்றார். இவர் நேற்று திங்கள்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்தபோது, 10 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்து அரிவால் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களால் மனோஜை கொடூரமாக தாக்கியுள்ளனர். மேலும், வீட்டில் இருந்த அனைத்துப் பொருள்களையும் அடித்து நொறுக்கிய நிலையில், அக்கம்பக்கத்தினர் தடுக்க முயற்சித்தபோது அவர்களின் வீட்டையும் அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பாளையங்கோட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று திங்கள்கிழமை மாலை மனோஜ் தனது வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டிருந்தபோது, வேகமாக சென்ற காரை மறித்து தெருக்குள் வேகமாக செல்லாதீர்கள் என்று அறிவுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தில் உள்ள அனைவரும் ஒன்றுகூடி பேசி, பிரச்னையை சுமூகமாக தீர்த்து உள்ளனர். ஆனால், இரவு மீண்டும் இரு சக்கர வாகனத்தில் வந்த 10 பேர் கொண்ட கும்பல், அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் மனோஜ் வீட்டுக்குள் புகுந்து வெட்டியுள்ளனர். மேலும், மனோஜின் தலையில் பீர் பாட்டிலைக் கொண்டும் தாக்கியுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பேரை உடனடியாக கைது செய்தனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட நபரின் உறவினரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த பகுதியில் உள்ள மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இருந்தாலும் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யக் கோரி, மேல பாட்டத்தில் சிறுவனின் வீரு முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல்துறையினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்டு வரும் தொடர் தாக்குதலால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.