நல்லாட்சியை பற்றி அதிமுக பேசுவது நகைச்சுவையாக உள்ளது: கனிமொழி

தமிழகத்தில் நல்லாட்சியை பற்றி அதிமுக பேசுவது நகைச்சுவையாக உள்ளது என எம்.பி. கனிமொழி கூறினார்.

சென்னை காமராஜர் சாலையில் உள்ள லேடி வெலிங்டன் மாதிரி பள்ளியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் இந்தியா டர்ன்ஸ் பிங்க் நிறுவனம் இணைந்து நடத்தும் பெண்களுக்கான இலவச மார்பக புற்றுநோய் கண்டறிதல் முகாம் தொடக்க விழா இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குநர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பரிசோதனை முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஏராளமான மீனவ பெண்கள், ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டு பரிசோதனை மேற்கொண்டனர்.

முன்னதாக விழா மேடையில் பேசிய கனிமொழி, இது மாணவிகளுக்கான மிக முக்கியமான நிகழ்ச்சி என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும், இதற்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இன்று லட்சக்கணக்கான பெண்கள் இந்தியாவில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், அடுத்த தலைமுறை சேர்ந்த நீங்கள் உங்களின் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும், பெண்கள் தன்னை தானே பார்த்துக் கொள்ள வேண்டும், பாதுகாத்துக் கொள்ளவதுதான் நம்முடைய முதல் கடமை. நம்முடைய கடைசி மூச்சு வரை நம்முடன் இருக்கும் உடலை நாம் தான் கவனித்துக் கொள்ள வேண்டும். மார்பக புற்றுநோயால் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பெண்களை நாம் இழந்து வருகிறோம். மார்பக புற்றுநோயை முதல் நிலையிலேயே கண்டறிந்து சுலபமாக குணப்படுத்திக் கொள்ள முடியும். மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மாணவிகள் ஏற்படுத்த வேண்டும். இதுதான் மக்களுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய சீராகும் என்று கூறினார்.

பின்னர் கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

விசிக தலைவர் தெளிவாக தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார். திமுக கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி. நாட்டின் மதச்சார்பின்மையை காப்பது முக்கிய கொள்கை. இந்தியா கூட்டணியை பிளவுபடுத்த முடியாது. வெற்றி வாய்ப்புகள் மற்றும் எதிர்ப்புகளை வலுவாக வெளிப்படுத்தக்கூடிய கூட்டணி. இந்தியா கூட்டணி மிக வலிமையாக உள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் நல்லாட்சியை பற்றி அதிமுக பேசுவது நகைச்சுவையாக உள்ளது . கூட்டணி குறித்துதான் நாங்கள் பேச முடியும். கூட்டணி தலைவர்கள் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றார்கள் என்பது எல்லாம் நாங்கள் கண்காணிக்க தேவையில்லை. இவ்வாறு கனிமொழி கூறினார்.