விருதுநகர் பட்டாசு ஆலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

விருதுநகரில் பல முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கன்னிசேரி புதூரில் உள்ள பட்டாசு ஆலையை நேரில் ஆய்வு செய்தார்.

கன்னிச்சேரி புதூர் பகுதியில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகளுக்குள் நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்களிடம் எத்தனை ஆண்டுகளாக பணியாற்றி வருகிறீர்கள், எவ்வளவு மணி நேரம் வேலை செய்கிறீர்கள், வார விடுமுறை எப்போது? பட்டாசு தயாரிக்கும் பணி, சந்திக்கும் சிக்கல்கள் தொடர்பாக நேரடியாகவே கேட்டறிந்துகொண்டார்.

தொழிலாளர்களும், உயிரை பணயம் வைத்து வேலை செய்கிறோம், எங்களுக்கு ஏதேனும் நேர்ந்தால், எங்கள் பிள்ளைகளின் படிப்புச் செலவை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர். இதனைக் கேட்ட முதல்வர் ஏற்கனவே அதையெல்லாம் செய்துவருகிறோம். ஆனால் விபத்து நேரிடக்கூடாது என்பதற்காகத்தான் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று பதிலளித்தார்.

விருதுநகரில் இரண்டு நாள் பயணம் மேற்கொள்வதற்காக இன்று காலை மதுரை வந்தடைந்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். மதுரை விமான நிலையம் வந்த முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையம் வந்த முதல்வருக்கு தொண்டர்கள் சால்வை, பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக விருதுநகர் சென்றார்.

விருதுநகர் திமுகவினர் சார்பாக மூன்று கிலோமீட்டர் தொலைவுக்கு முதல்வருக்கு வரவேற்பு அளித்தனர். சூலக்கரை பகுதியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளை சந்தித்தார். அதைத்தொடர்ந்து கன்னிசேரி புதூரில் உள்ள பட்டாசு ஆலையை ஆய்வு செய்துவிட்டு, மாலை விருதுநகர் முக்கிய சாலையில் உள்ள ரோட் சோவில் பங்கேற்க புறப்பட்டுச் சென்றார்.

தொடர்ந்து நாளை காலை 77.11கோடி‌ ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாக கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்று விட்டு அங்கிருந்து மீண்டும் சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையம் வந்தடைந்து மதியம் 1:50 மணியளவில் சென்னை புறப்பட்டு செல்கிறார்.