சென்னையில் அரசு மருத்துவர் மீது தாக்குதல்: விசாரணைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

“மருத்துவர் பாலாஜிக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியுள்ளதாவது:-

கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜி நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் பாலாஜிக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.

அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம் – காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் குறித்து, கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை இயக்குநர் அளித்த பேட்டியில், “இந்த தாக்குதல் நடத்தியதாக பிடிபட்டுள்ள நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த நபரின் தாய்க்கு உடல்நிலை சரியில்லை. இதனால், இந்த மருத்துவமனையில் 6 முறை கீமோதெரபி சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர், நுரையீரல் பாதிப்பு இருந்ததால், தனது தாயை வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். கடந்த இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு அவரது தாயின் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதால், தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருக்கிறார். அந்த மருத்துவமனையில் என்ன கூறினார்கள் என்று தெரியவில்லை. தனியார் மருத்துவமனையில் கூறியது தொடர்பாக மருத்துவர் பாலாஜியிடம் விவாதிக்க வந்தபோதுதான், இந்த சம்பவம் நடந்துள்ளது. அவர்கள் இருவருக்குள் என்ன விவாதம் நடந்தது என்பது, தாக்குதலுக்கு உள்ளான மருத்துவர் கூறினால்தான் தெரியவரும். மருத்துவர் பாலாஜியின் அறையில்தான், அவருடைய அறையை மூடிவிட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

மருத்துவர் பாலாஜியின் கழுத்து, காதின் பின்பகுதி, நெற்றி, முதுகு மற்றும் தலையில் இரண்டு இடங்களில் கத்தியால் குத்தப்பட்டிருக்கிறது. மருத்துவரின் வயிற்றில் கத்திக்குத்து எதுவும் இல்லை. மற்ற காயங்களில் எல்லாம் ரத்தம் அதிகமாக வெளியேறியிருந்தது. மருத்துவர் ஏற்கெனவே ஒரு இதய நோயாளி. அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். அசிட்டோன் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால், சாதாரண காயங்கள் ஏற்பட்டாலே ரத்தம் வடிதல் அதிகமாக இருக்கும்.

இந்த தாக்குதலில் அவருக்கு அதிகமாக ரத்தம் வெளியேறியதால், உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அனைத்து துறை நிபுணர்களும் சேர்ந்து அவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்போதைக்கு அவர் மயக்க நிலையில் இருந்தாலும், அவர் நன்றாக இருக்கிறார். மொத்தம் 7 இடங்களில் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த தாக்குதல் நடத்தியவர் பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது” என்று அவர் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

இந்த மருத்துவமனைக்கு அருகில்தான் கிண்டி காவல் நிலையம் இருக்கிறது. 24 மணி நேரமும் இங்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 2000-க்கும் அதிகமான நோயாளிகள் இங்கு தினமும் சிகிச்சைக்காக வருகின்றனர். புறநோயாளிகளுக்கான சீட்டு இல்லாமல் மருத்துவரை வந்து பார்க்க முடியாது. தாக்குதல் நடத்திய நபரின் தாய்க்கு இங்கு ஹீமோதெரபி சிகிச்சை கொடுத்துள்ளதால், அந்த நபர் இங்கு ஏற்கெனவே வந்திருக்கிறார். அந்த நபரை இங்குள்ளவர்களுக்கு தெரிந்திருந்ததால், மருத்துவரை சென்று பார்த்த நேரத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

இங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அவருக்கு தவறானது புரிதல் ஏற்பட்டிருக்கிறது. விக்னேஷின் தாய்க்கு இங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தவறு என்று யாரோ அவரிடம் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால், கோபமடைந்த நபர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மருத்துவர் பாலாஜி தற்போது உயிர் பாதுகாப்பான நிலையில் இருக்கிறார், என்று அவர் கூறினார்.