மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதி!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக வைகோ அட்மிட் ஆகியுள்ளார். வலது கை தோள்பட்டையில் வைக்கப்பட்டுள்ள பிளேட்டை அகற்றுவதற்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் வைகோவிற்கு வலது கை தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், தோள்பட்டையில் வைக்கப்பட்டுள்ள பிளேட்டை அகற்ற வைகோ மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக கடந்த மே மாதம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நெல்லையில் உள்ள தனது சகோதரர் வீட்டில் இருந்த போது கால் இடறி கீழே விழுந்தார். இதில் வைகோவின் தோளில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து வைகோவிற்கு சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வைகோ, பூரண உடல் நலம் பெற்று வீடு திரும்பியிருந்தார். வைகோவின் இடது தோளில் 3 இடத்தில் எலும்புகள் உடைந்திருந்தன என்றும் அதை சரிசெய்ய டைட்டானியம் பிளேட் வைக்கப்பட்டுள்ளது. 40 நாட்கள் ஓய்வுக்கு பிறகு, அறுவை சிகிச்சை செய்தால் தோள்பட்டை சரியாகி இயல்பு நிலைக்கு வந்துவிடும் என்று வைகோவின் மகன் துரைவைகோ கூறியிருந்தார்.

இந்த நிலையில் தான் வலது கை தோள்பட்டையில் வைக்கப்பட்டிருக்கும் பிளேட்டை அகற்றுவதற்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.