எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது: அமைச்சர் ரகுபதி!

எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமி திமுக மீது வைக்கின்ற குற்றச்சாட்டுகள் அனைத்தும் வீண் குற்றச்சாட்டுகள். அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணையின்போது தெரியவரும். அவர் ஒன்றும் நிரபராதி கிடையாது. அவர் எந்த தவறும் செய்யாதவர் கிடையாது.

திமுக மீது பழிசுமத்துவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது. திமுக அமைச்சர்கள் எந்த தவறுகளையும் செய்யவில்லை. நீதிமன்றத்திற்கு சென்று வெற்றி பெற்று வருவோமே தவிர, நீதிமன்றத்தை கண்டு அஞ்சுவதில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி ஒரு முறை சென்றால் தெரியும், அதை மனதில் வைத்துக்கொண்டு அவர் பேச வேண்டும்.

அரசின் திட்டங்கள் குறித்து துணை முதல்-அமைச்சர் விவாதிக்க தயார் என கூறிய பின், எடப்பாடி பழனிசாமி விவாதத்திற்கு வர வேண்டியது தானே. 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமியால் வலுவான கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை. நடிகர் விஜய், எம்.ஜி.ஆர். பாணியை பின்பற்ற பார்க்கிறார். எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது. அவர் அதில் தோல்வியை காண்பார். இவ்வாறு அவர் கூறினார்.