சென்னை கிண்டி மருத்துவமனையில் நேற்று மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மின்சாரம் தடைப்பட்டது. 3 மணிநேரத்துக்கு பிறகு மீண்டும் மின்இணைப்பு கொடுக்கப்பட்ட நிலையில் சென்னை கிண்டி மருத்துவமனையில் திடீரென்று தீப்பற்றி மின்கம்பிகள் எரிந்தது தான் மின்தடைக்கு காரணம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
சென்னை கிண்டியில் தமிழக அரசின் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை உள்ளது. இங்கு மொத்தம் 490 நோயாளிகள் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 15 பேர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் பிற வார்டுகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே தான் நேற்று மாலை 6.45 மணியளவில் திடீர் மின்தடை ஏற்பட்டது. இரவு 10 மணி வரை இந்த மின்தடை என்பது நீடித்தது. மருத்துவமனைக்கு டிரான்ஸ்பார்மரில் இருந்து மின்சாரம் வரும் வயர் எரிந்தது தான் மின்தடைக்கு முக்கிய காரணமாகும். அதேபோல் ஜெனரேட்டர் வயர் எரிந்ததாலும் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்து மின்சாரம் வழங்க முடியவில்லை. இதனால் நோயாளிகள் பரிதவித்தனர். மருத்துவமனையில் இருள் சூழ்ந்து இருந்ததால் நோயாளிகளுடன் இருந்தவர்களும் தவித்தனர். அவர்கள் செல்போனின் டார்ச்லைட்டை பயன்படுத்தினர். இருப்பினும் வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருந்தவர்களுக்கு தனி ஜெனரேட்டர் மூலம் சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டது. அதன்பிறகு இரவு 10 மணியளவில் மின்சாரம் மீண்டும் விநியோகம் செய்யப்பட்டது.
முன்னதாக கிண்டி மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டது பற்றி அறிந்தவுடன் சுகாதாரத்துறை செயலர் சுப்ரியா சாகு சம்பவ இடத்துக்கு விரைந்தார். அதேபோல் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கிண்டி மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார். மின்சாரம் தடைப்பட்டதற்கான காரணத்தை கேட்டறிந்தார்.அதன்பிறகு மா. சுப்பிரமணியன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கிண்டி மருத்துவமனைக்கு மின்தடை சரிசெய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்று கொண்டிருக்கும் வயர் மூலம் மின்தடை சரிசெய்யப்பட்டுள்ளது. எந்தவித மின்தடையும் இல்லாமல் பாதுகாப்பாக மருத்துவமனை இயங்கி வருகிறது. மருத்துவமனைக்கு மின்சாரம் வழங்கும் கேபிள் தரைக்கடியில் செல்கிறது. அந்த கேபிள் திடீரென்று வெடித்துள்ளது. மின்கம்பியில் தீப்பற்றியதால் மின்தடை ஏற்பட்டுள்ளது. உடனடியாக பொதுப்பணித்துறையினர் கேபிளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.