திமுக அரசு தமிழ்நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கிறது. சமூக நீதிக்கு தி.மு.க. அரசு மூடுவிழா நடத்தியுள்ளது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
பொருளாதாரத்தை மேம்படுத்தப் போகிறோம், அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்கப் போகிறோம், அரசு காலிப் பணியிடங்களை நிரப்பப் போகிறோம், அரசின் நிதி நிர்வாகத்தை சீர்செய்யப் போகிறோம்; மக்களுக்கான நலத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லப் போகிறோம் என்றெல்லாம் வாக்குறுதிகளை அள்ளிவீசி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தி.மு.க. அரசு, அனைத்திலும் படுதோல்வியடைந்து தமிழ்நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கிறது.
அம்மா அவர்களின் சிந்தனையில் உருவாக்கப்பட்ட தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம், மகளிர் இரு சக்கர மானியம் வழங்கும் திட்டம், மடிக்கணினி வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்களை முடக்கிய தி.மு.க. அரசு, தற்போது அரசு தகவல் தொகுப்பு விபர மையம், ஓய்வூதிய இயக்குனரகம், சிறு சேமிப்பு இயக்குனரகம் போன்றவற்றை கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறையுடன் இணைத்து, மூன்று துறைகளுக்கு மூடுவிழா நடத்தி அரசாணை பிறப்பித்துள்ளது பொதுமக்களிடையே குறிப்பாக அரசு ஊழியர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க. அரசின் மேற்படி செயல் மூலம், அரசு வேலைவாய்ப்புகள் இனி உருவாக்கப்படமாட்டாது என்பதும், காலிப் பணியிடங்கள் தேவைக்கேற்ப நிரப்பப்படாது என்பதும் தெள்ளத் தெளிவாகிறது.
இது மட்டுமல்லாமல், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம் இனி கானல் நீர் என்பதும் தெளிவாக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், சமூக நீதிக்கு தி.மு.க. அரசு மூடுவிழா நடத்தியுள்ளது. ஒருவேளை சமூக நீதியை காவு கொடுப்பதுதான் ‘திராவிட மாடல்’ போலும். தி.மு.க. அரசின் இந்த மக்கள் விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களுக்கு உண்மையிலேயே சமூக நீதியை நிலைநாட்ட வேண்டுமென்ற அக்கறை இருக்குமேயானால், மூன்று துறைகளுக்கு மூடுவிழா நடத்த பிறப்பித்துள்ள ஆணையை உடனடியாக திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.