அமலாக்கத்துறை வழக்குகளில் எத்தனை வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது?: உச்சநீதிமன்றம்!

அமலாக்கத்துறை பதிவு செய்த பணமோசடி தடுப்புச் சட்ட (PMLA) வழக்குகளில் எத்தனை வழக்குகளில் விசாரணை முடிந்துள்ளது? அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்குகளில் எத்தனை வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது? என உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

செந்தில் பாலாஜி வழக்கை சுட்டிக்காட்டி, அமலாக்கத்துறை பதிவு செய்த பண மோசடி வழக்கில் கைதானவருக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டும் இதுவரை அந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கவில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அபய் எஸ் ஓகா, நீதிபதி உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நபரின் ஜாமீன் மனுவை விசாரித்தது. அப்போது, அமலாக்கத்துறையின் வழக்கறிஞரிடம் வாய்மொழியாக, “அமலாக்கத்துறை பதிவு செய்த பணமோசடி தடுப்புச் சட்ட (PMLA) வழக்குகளில் எத்தனை வழக்குகளில் விசாரணை முடிந்துள்ளன, எத்தனை வழக்குகளில் தண்டனை பெற்றுத் தந்துள்ளீர்கள் என நீங்கள் கண்டறிந்து சொல்ல வேண்டும்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஜாமீன் கோரியுள்ள நபர் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறை கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார். ஆனால், இதுவரை விசாரணை தொடங்கவில்லை, எப்போது விசாரணை தொடங்கும் என்றும் தெரியவில்லை எனக் கூறி, அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

அமலாக்கத்துறை விசாரணை குறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவிப்பது இது முதல் முறை அல்ல. கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு வழக்கின் விசாரணையின்போதும் உச்ச நீதிமன்றம் இதுதொடர்பாக அமலாக்கத்துறைக்கு அதிருப்தி தெரிவித்து இருந்தது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வந்ததை தொடர்ந்து 5,000 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் வெறும் 40 வழக்குகளில் மட்டுமே அமலாக்கத்துறையால் தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் மோசமான புலன் விசாரணையின் தொடர்ச்சி என்றே பார்க்க முடிகிறது என நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

பாஜக ஆட்சியில், எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கான ஆயுதமாக அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்றன. சமீபகாலத்தில் அமலாக்கத்துறை, டெல்லி முதல்வர் செந்தில் பாலாஜி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் பலரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.