‘திமுக ஆட்சிக்கு எதிராக பதிவிடுவோருக்கு ‘கருத்து சுதந்திரம்’ கிடையாது: வானதி சீனிவாசன்!

கருத்து சுதந்திரம் என்பது திமுக ஆட்சிக்கு எதிராக பதிவிடுபவர்களுக்கு கிடையாது. என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

கோவை தெற்கு தொகுதியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் இருவேறு இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் தொடக்க விழா நேற்று நடந்தது. கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ மற்றும் பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதி 81-வது வார்டு வஉசி பூங்கா பகுதி மற்றும் 83-வது வார்டு ஹைவேஸ் காலனி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இயந்திரங்களை மக்கள் முன்னிலையில் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்பதற்காக குறிப்பாக பொருளாதார சுமையை குறைக்கும் வகையில் தெற்கு தொகுதியில் அமைக்கப்பட்ட இயந்திரங்கள் மூலம் 11 ஆயிரம் குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர். தற்போது கூடுதலாக இரு இடங்களில் திறக்கப்பட்ட இயந்திரங்கள் மூலம் மேலும் 2,000 குடும்பங்கள் பயன் பெற உள்ளனர்.

ராமநாதபுரம் பகுதியில் தானியங்கி இயந்திரத்தை வைப்பதற்காக இருந்தோம். ஆனால் அப்பகுதி கவுன்சிலர் தடையாக இருந்து வருகிறார். மாநகராட்சி ஆணையரிடம் இதுகுறித்து பேசி வருகிறோம். கல்லூரி மாணவர்கள், போராட்டத்தில் கலந்து கொள்வது இயல்பான ஒன்று தான். அதில் தவறு ஒன்றும் இல்லை. தமிழ்நாட்டில் அரசுக்கு, எதிராக கருத்துக்களை பதிவிடுவோர். குறிப்பாக கைது செய்யப்படுவது இது புதிதல்ல. கருத்து சுதந்திரம் என்பது திமுக ஆட்சிக்கு எதிராக பதிவிடுபவர்களுக்கு கிடையாது. யாரெல்லாம் எதிராக இருக்கிறார்களா அவர்களை கைது செய்வதை தமிழக அரசு வழக்கமாக கொண்டுள்ளது.

வன்முறையை தூண்டும் வகையில் பேசினால், அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போன்று பிரதமரை விமர்சனம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும். ஆளுநர் குறித்து எவ்வளவு கீழ்த்தரமாக விமர்சிக்க முடியுமோ, அந்த அளவிற்கு விமர்சிப்பது அரசியல் நாகரீகமா. கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் விமர்சனத்திற்கு கண்டனம்.

கடந்த முறை நான் பேட்டியளித்து கொண்டிருந்த போது விஜய் ரசிகர் எனக்கு பின்னால் போட்டோ காட்டியதை நானும் பார்த்தேன். பாஜக கருத்து சுதந்திரம் அனுமதிக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. சினிமா பிரபலங்கள் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்களிடம் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்ட பிறகும் தமிழக அரசு கைது செய்துள்ளது. அவர் சட்ட ரீதியாக அடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வார். இவ்வாறு அவர் கூறினார்.