நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் உதயநிதி என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
காவிரி- சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்திய அ,தி,மு,க, பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு விவசாய சங்கங்கள் சார்பில் இன்று மாலை பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்காக ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. தி.மு.க. திறந்து வைத்த பெரும்பாலான திட்டங்கள் கடந்த ஆட்சியில் அ.தி.மு.க. கொண்டு வந்தது. அ.தி.மு.க. ஆட்சியில் குடிமராமத்து திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது, குடிமராமத்து திட்டத்தால் விவசாயிகள் பயன் அடைந்தனர்.
விவசாயிகளை பற்றி தி.மு.க. அரசுக்கு கவலை இல்லை. விவசாயிகளுக்கு தி.மு.க. அரசு எந்த நன்மையும் செய்யவில்லை. தனக்கு என்ன வருமானம் கிடைக்கிறது என்பதே தி.மு.க.வின் நோக்கம். அரசுக்கு வருவாய் கிடைக்கிறதோ இல்லையோ, அவர்களது கஜானாவுக்கு வருவாய் கிடைக்கிறது. 50 ஆண்டுகாலமாக காவிரி நதி நீர் பிரச்னை தீர்க்கப்படவில்லை. காவிரி நதி நீர் பிரச்னையை தீர்க்க கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்தை கொண்டுவர வேண்டும். மேட்டூர் அணை உபரிநீர் வீணாக கடலில் கலப்பதை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.
கோட்டையில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திடுவது மட்டும் வேலை இல்லை. விவசாயிகளுக்கு என்ன தேவை என்பதை அறிந்து ஆட்சி செய்ய வேண்டும். நாம் பெற்ற பிள்ளைக்கு பெயர் வைப்பதுதான் முதல்-அமைச்சர் ஸ்டாலினின் வேலை. விவசாயிகள் காலில் அணிவதற்கு காலணி கூட இல்லாத நிலையில், பல கோடி ரூபாய் செலவு செய்து கார்பந்தயம் நடத்துவது தேவைதானா?. தி.மு.க. ஆட்சிக்கு வந்து 42 மாத காலம் ஆகியும் சரபங்கா வெள்ள உபரிநீர் நீரேற்று திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது.
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் உதயநிதி. அப்பா மகனை புகழ்ந்து பேசுகிறார். மகன் அப்பாவை புகழ்ந்து பேசுகிறார். இதுதான் வேடிக்கை. உதயநிதி ஸ்டாலின் அவர்களே நாவடக்கம் தேவை. செல்வ செழிப்பில் வளர்ந்த உங்களுக்கே இவ்வளவு திமிர் என்றால், உழைப்பால் உயர்ந்தவர்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும். ரெய்டை பார்த்து எங்களுக்கு பயமில்லை. எதையும் எதிர்கொள்ளும் சக்தி அ.தி.மு.க.விற்கு உள்ளது. மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.