ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி-யின் இணையதளப் பக்கம் ஆங்கிலத்தில் இருந்து இந்தி மொழியில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
எல்ஐசி இணையதளம் இந்தித் திணிப்புக்கான கருவியாகச் சுருக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழிக்கு மாற்றுவதற்கான தெரிவும் கூட இந்தியில்தான் உள்ளது. இது இந்தியாவின் மொழிப் பன்மைத்துவத்தை நசுக்கும் வலுக்கட்டாயமான பண்பாட்டு, மொழித் திணிப்பேயன்றி வேறல்ல.
இந்தியர்கள் அனைவரின் ஆதரவோடும் வளர்ந்ததுதான் எல்ஐசி. அத்தகைய நிறுவனம் தனது வளர்ச்சிக்குப் பங்களித்த பெரும்பான்மையான மக்களை இப்படி வஞ்சிக்கத் துணியலாமா? உடனடியாக இந்த மொழிக் கொடுங்கோன்மையை நிறுத்திப் பழையபடி ஆங்கிலத்துக்கு மாற்ற வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-
இந்தி மொழி தெரியாத மக்களுக்கு தற்போது எல்ஐசி-யின் இணையதளம் பயன்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது. இணையதளத்தின் மொழி மாற்றும் விருப்பமும் இந்தி மொழியிலேயே இருப்பதால் அதனை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது.எங்கு, எதில் எப்படி இந்தியை திணிக்கலாம் என்ற முனைப்பிலேயே மத்திய அரசு செயல்படுவது கண்டனத்துக்குரியது. மொழி, பண்பாடு, அமைப்பு, அரசியல் என எல்லாவற்றிலும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒற்றைத்தன்மையை திணிப்பது நாட்டின் சமநிலையை பாதிக்கும் செயல். அது ஏற்புடையதல்ல” என்று கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ்:-
இந்தியாவில் உள்ள அனைத்து மொழி பேசும் மக்களும் எல்ஐசி-யின் வாடிக்கையாளர்களாக இருக்கும் நிலையில், இந்திக்கு மட்டும் திடீர் முன்னுரிமை அளிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. மத்திய அரசும், மத்திய அரசின் நிறுவனங்களும் காலம் காலமாக தமிழ் உள்ளிட்ட பிற மொழி பேசும் மக்கள் மீது தொடர்ந்து இந்தியைத் திணிக்க முயன்று வருகின்றன. இந்த முயற்சியில் அவை பல முறை சூடுபட்டாலும் கூட, அந்த முயற்சியை மட்டும் கைவிடுவதில்லை. மத்திய அரசாக இருந்தாலும், எல்ஐசி-யாக இருந்தாலும் தாங்கள் அனைத்து மக்களுக்கும் உரித்தானவர்கள், இந்தி பேசும் மக்களுக்கு மட்டும் சொந்தமானவர்கள் அல்ல என்ற அடிப்படையை உணர வேண்டும்“ என்று தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:-
கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி இணையதளத்தை முழுமையாக இந்தியில் மாற்றி அமைத்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது.காப்பீட்டுத் துறையில் மக்கள் பயன்பாட்டுக்கு உரிய முறையில் அனைத்து மாநில மொழிகளிலும் எல்ஐசி இணையதளம் இயங்கினால்தான் நன்மை தருவதாக இருக்கும். ஆனால் மத்திய பாஜக அரசு, இந்தி மொழியில் எல்ஐசி இணையதளத்தை மாற்றியதன் மூலம் இந்தி பேசாத மாநில மக்களுக்கு பச்சை துரோகம் இழைத்திருப்பது கண்கூடாக தெரிகிறது.” என்று கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை:-
எல்ஐசி இணைய தளத்தை இந்தி மயமாக்கியிருக்கும் மத்திய அரசுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசின் துறைகளின் லோகோக்களை காவி மயமாக்குவது அல்லது அதனுடைய இணைய தளத்தை இந்தி மயமாக்குவது. இந்த இரண்டையும் தன்னுடைய கொள்கைகளாக வைத்திருக்கும் மத்திய அரசுக்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறேன். இந்தி பேசாத மக்களின் உணர்வை புண்படுத்தும், மொழி உரிமையை காயப்படுத்தும் வேலைகளை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.