பிரபல தொழில் அதிபர் கவுதம் அதானி முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் குற்றச்சாட்டு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான சூரிய ஒளி மின் திட்ட ஒப்பந்தங்கள் பெறுவதற்கு இந்திய தொழிலதிபர் கவுதம் அதானியின் குழுமம் தீவிர முயற்சிகளைக் கொண்டது. அப்போது இந்திய அதிகாரிகளுக்கு ரூ2,100 கோடி லஞ்சம் தரவும் அதானி குழுமம் ஒப்புக் கொண்டது. ஆனால் இந்த தகவல்களை மறைத்து அமெரிக்காவின் முதலீட்டாளர்களிடம் இருந்து அதானி குழுமம் முதலீடுகளைப் பெற்றது என்பது அந்நாட்டின் குற்றச்சாட்டு. இது தொடர்பாக நியூயார்க் நீதிமன்றத்தில் அமெரிக்கா அரசு வழக்கும் தொடர்ந்தது. இந்த வழக்கில் கவுதம் அதானி, அவரது உறவினரான சாகர் அதானி உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்த விவகாரம் தொடர்பாக அதானி குழுமம் தரப்பில் எந்த ஒரு விளக்கமும் தரப்படவில்லை.
அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் என்கிற நிதி ஆய்வு நிறுவனமானது ஏற்கனவே அதானி குழுமம் மீது பங்குச் சந்தை மோசடி புகார்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்திய பங்குச் சந்தை ஆணையத்தின் தலைவரான மாதவி புச் மற்றும் அதானி குழுமங்களிடையேயான வர்த்தக உறவு தொடர்பாகவும் ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால் உருவான புயல் இந்தியாவில் இன்னமும் ஓயவில்லை. இந்த நிலையில் ரூ2100 கோடி லஞ்சம் தர அதானி குழுமம் முன்வந்த வழக்கு புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.