ஜனவரி மாதம் முதல் 2026 சட்டப்பேரவை தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து பாஜக உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக பாஜக உயர்மட்ட குழு கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் நேற்று நடந்தது. பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச்.ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், சட்டப்பேரவைக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில பொதுச் செயலாளர்கள் ஏ.பி.முருகானந்தம், கார்த்தியாயினி, துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், கே.பி.ராமலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், பாஜக அமைப்புத் தேர்தல், உறுப்பினர் சேர்க்கை பணிகள் தொடர்பாகவும், ஜனவரி மாதம் முதல் 2026 சட்டப்பேரவை தேர்தலை நோக்கிய பணிகளை தீவிரப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், அதிமுக கூட்டணி தொடர்பாக பொது வெளியில் நிர்வாகிகள் யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என மேலிட பொறுப்பாளர்கள் அறிவுறுத்தியிருப்பதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.
கூட்டத்துக்கு பிறகு எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நவம்பர் 30-ம் தேதிக்குள் கிளை தேர்தல்கள் நடத்தி முடிக்கப்படும். டிசம்பர் மாதம் நகர, ஒன்றிய தேர்தல் மற்றும் மாவட்ட தேர்தல்கள் நடைபெறும். அகில இந்திய தலைவர் தேர்தல், மாநில தலைவர் தேர்தல் ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷின் மகன் தமிழ் படிக்கவில்லை என்ற செய்தி வந்துள்ளது. தன் வீட்டு பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லி கொடுப்பதில்லை. அவர்கள் குழந்தைகள் இரு மொழி கொள்கையை பின்பற்றுவதில்லை. ஆனால், தமிழகத்தில் இருமொழி கொள்கை வேண்டும் என திமுகவினர் பேசுகிறார்கள். வெட்கமே இல்லாமல், சிபிஎஸ்இ பள்ளிக் கூடங்களை நடத்துகிற குற்றவாளிகளின் கட்சி தான் திமுக.
திமுகவினர் குழந்தைகள் மட்டும் மூன்று மொழிகளை படிப்பார்கள். ஆனால், ஏழை விவசாயி குழந்தை மூன்று மொழிகளை படிக்கக்கூடாதா? ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது, தேசிய கல்வி கொள்கை முடிவு செய்யப்பட்டது. அதில், மூன்றாவது மொழி இந்தி அல்லது சமஸ்கிருதம் என இருந்ததை, ஏதாவது ஒரு இந்திய மொழி என மாற்றி அனைத்து மொழிகளுக்கும் முன்னுரிமை கொடுத்தது, பிரதமர் மோடி தான். தமிழ் மொழி விஷயத்தில் முதல்வர் குடும்பம் முதல் திமுகவில் உள்ள அனைவரும் குற்றவாளிகள் தான்.
கனிமொழி தொகுதியான தூத்துக்குடியில் பள்ளி குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறது. அவர் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்து பள்ளியில் நடந்த இது போன்ற சம்பவத்துக்கு கொதித்து எழுந்தார். தற்போது முஸ்லீம் பள்ளியில் நடந்த சம்பவம் என்பதால் அமைதியாக இருக்கிறாரா? பள்ளி கல்வித் துறை அமைச்சரும் ஏன் வாய் மூடிக் கொண்டிருக்கிறார்? பள்ளிக்கூடத்தில் மகா விஷ்ணு ஆன்மிகம் பற்றி பேசியதற்கு வெட்கமே இல்லாமல், அன்பில் மகேஷ் ஒரு நாடகம் நடத்தினார். ஏன் தூத்துக்குடியை பற்றி அவர் பேசவில்லை. அவரது பேட்டையில் தூத்துக்குடி வராதா? பெண்கள், பெண் குழந்தைகளை பற்றி கவலைப்படாத அரசாக திமுக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.