ஹேமந்த் சோரன் அவர்களுக்கும், நமது இந்தியா கூட்டணிக்கும் எனது வாழ்த்துகள்: முக ஸ்டாலின்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜேஎம்எம் கட்சி, காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றிக்கு ஹேமந்த் சோரனின் உறுதிதான் காரணம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது:-

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அனைத்துத் தடைகளையும் கடந்து வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ள மாண்புமிகு ஹேமந்த் சோரன் அவர்களுக்கும், நமது இந்தியா கூட்டணிக்கும் எனது வாழ்த்துகள்!

அதிகாரத்தைத் தவறான முறையில் பயன்படுத்துவது, பழிவாங்கும் அரசியல் மற்றும் பல தடைகளைக் கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜ.க. உருவாக்கினாலும் – அத்தனையையும் துணிச்சலுடனும் உறுதியுடனும் எதிர்த்து நின்று திரு. ஹேமந்த் சோரன் அவர்கள் வென்றுள்ளார். அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் அவரது தலைமையில் தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை ஜார்க்கண்ட் மக்கள் தேர்தல் முடிவுகளில் வெளிப்படுத்தியுள்ளனர். இது மக்களாட்சிக்கும் மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சமீபமாக நடந்த அரசியல் பஞ்சாயத்துகள் நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஏற்படுத்தியிருந்தது. அமலாக்கத்துறையால் குற்றம்சாட்டப்பட்டு முதலில் கைது செய்யப்பட்ட முதல்வர் ஹேமந்த் சோரனாகத்தான். சுரங்க முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை முதலில் உள்ளே வந்தது. தொடர்ந்து சம்மன் அனுப்பி ஆஜராகவும் வலியுறுத்தியிருந்தது. ஆனால், சோரன் இதற்கெல்லாம் அசைந்துகொடுக்கவில்லை. ஒருமுறை டெல்லியில் வைத்தே அவரை தூக்க அமலாக்கத்துறை திட்டமிட்டடிருந்தது. ஆனால், அவர் கார் மூலமாகவே டெல்லியிலிருந்து ஜார்க்கண்ட் வரை வந்து சேர்ந்தார். அமலாக்கத்துறை அதிகாரிகளே இந்த சம்பவத்தை பார்த்து அலறிவிட்டனர். இதனையடுத்து சோரனை கைது செய்ய அவர்கள் தீவிரம் காட்டி வந்தனர். தொடர் நெருக்கடி காரணமாக சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதம் கொடுத்த கையோடு அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. இதனையடுத்து ஹேமந்த் சோரனின் மனைவி முதல்வராக்கப்படலாம் என்று சொல்லப்பட்டது. அப்படி நடந்தால் வாரிசு அரசியல் என்று பேசி, வாக்கு வங்கியை பாஜக கலைத்துவிடும். இதை உணர்ந்த ஹேமந்த், முதல்வர் பொறுப்பை சம்பாய் சோரனிடம் ஒப்படைத்து சென்றார். அங்குதான் ட்விஸ்ட்.. கட்சியை வளர்ப்பார் என்று நினைத்தால் பாஜகவுடன் உறவை வளர்த்து வைத்திருந்தார் சம்பாய். சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த ஹேமந்த் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுக்கொள்ள.. சம்பாய் கோவித்துக்கொண்டு பாஜகவில் சரணடைந்தார். இந்த பின்னணியில்தான் தேர்தலே நடந்தது. இதில் ஹேமந்த் தோற்றுவிடுவார் என பாஜகவுடன் சேர்ந்து சம்பாயும் கனவு கண்டிருந்தார். ஆனால் அது கடைசிவரை பகல் கனவாகவே மாறி போனது என்பது குறிப்பிடத்தக்கது.