திமுக எம்பி ஆ. ராசாவுக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறை பதில் அளிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக முக்கிய தலைவர்களில் ஒருவராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தவர் ஆ.ராசா. தற்போது திமுக துணை பொதுச் செயலாளராக இருப்பதோடு, நீலகிரி தொகுதி மக்களவை உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்திலும், மேடையிலும் புள்ளிவிவரங்களுடன் அதிரடியாக வாதங்களை எடுத்து வைத்து வருகிறார்.
இதனிடைய வருமானத்திற்கு அதிகமாக 5.53 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக கடந்த 2015ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதன் அடிப்படையில் ஆ.ராசா உள்ளிட்டோர் மற்றும் சில நிறுவனங்கள் மீது சட்ட விரோத பணப் பறிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.
இதுதொடர்பாக ஆ.ராசாவின் 15 அசையா சொத்துக்களை கைப்பற்றியதாக அமலாக்கத் துறை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தகவல் வெளியிட்டது. அதில், “வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், ஆ.ராசாவுக்குச் சொந்தமான 15 அசையா சொத்துகளை, அவரது பினாமி நிறுவனமான கோவை ஷெல்டர்ஸ் ப்ரோமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் அமலாக்கத் துறை கைப்பற்றியது” என்று குறிப்பிட்டு இருந்தது.
இதுதொடர்பான வழக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எழில் வேலவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. கோவை ஷெல்டர்ஸ் ப்ரோமோட்டர்ஸ் நிறுவனம் சார்பில், “இந்த வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகையில் விசாரணை இன்னும் நிறைவடையவில்லை, கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று கூறியுள்ளது. ஆகவே, விசாரணை முடிந்து கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை குற்றச்சாட்டு பதிவு உள்ளிட்ட நடவடிக்கையையும் தொடங்கக் கூடாது” என்று மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை நவம்பர் 28ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். அன்றைய தினம் அமலாக்கத் துறை பதில் அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.