தென்காசியில் பள்ளி ஒன்றில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாணவர்களை பிறந்த நாள் வாழ்த்து கூற வைத்த சம்பவத்திற்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பள்ளி ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு பள்ளி மாணவர்கள் “ஹேப்பி பார்த் டே உதய் அண்ணா” எனக் கூறும் வீடியோ சர்ச்சையாகி உள்ளது. இதுதொடர்பாக தமிழக பாஜகவின் எக்ஸ் தள பக்கத்தில், “தென்காசி மாவட்டத்தில் ஐந்தருவி அருகே உள்ள ஒரு பள்ளியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி சிறார்களை பட்டப்பகலில் மொட்டை வெயிலில் நிற்க வைத்து பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூற கட்டாயப்படுத்தியுள்ள, அன்பில் மகேஷ் அவர்களின் அடியாட்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
உங்கள் அநீதிகளுக்கு ஒரு அளவே இல்லையா தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களே? தென்காசி மாவட்டம் ஐந்தருவி சாலையில் உள்ள ஒரு பள்ளியில், பள்ளிச் சிறுவர்களை உச்சி வெயிலில் நிற்க வைத்து உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைக் கூறுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர் உங்களின் கழக உடன் பிறப்புகள்.
தமிழக மாணவர்களை கிள்ளுக்கீரையாக நினைத்து உங்கள் இஷ்டம் போல ஆட்டிப் படைப்பது இது ஒன்றும் முதன்முறையல்ல. குறிப்பாக உங்களுக்கு தொடர்புடைய நிகழ்வுகளில் மட்டும் தமிழக பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் பணியாட்களைப் போல நடத்தப்படுவதும், தமிழக துணை முதல்வரான நீங்களே இதுபோன்ற அவலங்களைக் கண்டிக்காமல் ஊக்குவிப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
உங்கள் தந்தையான தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், உங்களுக்கு 100/100 மதிப்பெண் வழங்கி அழகுபார்த்தது இதற்குத்தானா? பிறந்தநாள் வாழ்த்து என்பது அன்பின் பேரில் கிடைப்பது என்பதை மறந்துவிட்டு, வாழ்த்து சொல்லச் சொல்லி பள்ளிக் குழந்தைகளை இவ்வாறு கட்டாயப்படுத்துவது தான் திராவிட மாடல் அரசா? உங்களின் தற்பெருமையைத் தம்பட்டம் அடித்துக் கொள்ள தமிழக பள்ளி மாணவர்கள் கிடைத்தார்களா? இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.