மாவீரர் நாள் தினத்தை முன்னிட்டு ‘மாவீரம் போற்றுதும்’ என வாழ்த்துகள் தெரிவித்துள்ளார் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய்.
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் சிங்கள இனவாதத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைக்காக போராடி வந்தனர். இதை அடுத்து தமிழ் போராளி குழுக்கள் இலங்கையில் தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களை தனியாக பிரித்து தனி ஈழம் என்ற தனி நாடு வேண்டும் கோரிக்கையோடு போராட்டத்தில் ஈடுபட்டனர். பல கட்டங்களை கடந்த இந்த போராட்டம் கடைசியில் ஒரே ஒரு அமைப்பு மட்டுமே களத்தில் இருக்கும் நிலைக்கு வந்தது. குறிப்பாக 2008-2009 காலகட்டங்களில் அந்த அமைப்பும் போரில் பின்னடைவை சந்தித்தது. போராளி குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் சிறிது சிறிதாக குறைந்து இறுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்தி கடல் பகுதியில் சுருக்கப்பட்டனர். அப்போது போராளி குழுக்களுக்கும் இலங்கை படைகளுக்கும் நடந்த கடைசி கட்டப் போரில் அந்த அமைப்பு தோற்கடிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாகவும் பல ஆயிரம் பேர் மாயமானதாகவும் இலங்கை அரசு மீது குற்றச்சாட்டப்படுகிறது. குறிப்பாக இலங்கை அரசு மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது.
இருந்த போதும் போராளி குழுவில் இருந்த வீரர்களின் தியாகத்தையும் வீரத்தையும் நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27ஆம் தேதி மாவீரர் நாள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு போராளி குழுக்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டாலும் இறுதிப் போரில் ஆயிரக்கணக்கான வீரர்கள் கொல்லப்பட்டதை நினைவு கூறும் வகையில் உணவுப் பூர்வமாக மாவீரர் நாள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இலங்கையில் அந்த தினத்திற்கு தடைகள் இருந்தாலும் உலகம் முழுவதும் வசிக்கும் தமிழர்களால் மாவீரர் தின நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அந்த நாளில் வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் ‘மாவீரர் போற்றுதும்.. மாவீரர் போற்றுதும்” என நான்கே வார்த்தையில் மாவீரர் நாள் தின பதிவை வெளியிட்டுள்ளார். இதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் அதனை ட்ரெண்டாக்கி வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட ஈழ மக்களுக்காக உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர் விஜய் எனவும், தற்போதும் அந்த உணர்வையே வெளிப்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர்.