தவெக மாநாட்டிற்கு வந்தபோது விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் இன்று நிதியுதவி அளித்துள்ளார். உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினரையும் பனையூர் அலுவலகத்திற்கு வரவழைத்த விஜய், அவர்களின் குடும்ப சூழலுக்கு ஏற்றார்போல் நிதி வழங்கியுள்ளார்.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை பகுதியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய், முதன் முதலாக அரசியல் உரை ஆற்றினார். இந்த மாநாட்டில் கலந்து கொள்ள தமிழ்நாடு முழுவதும் இருந்து தவெக நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் என லட்சக்கணக்கானோர் திரண்டனர். விஜய் கட்சியின் மாநாட்டிற்காக சென்னையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் புறப்பட்ட இளைஞர்கள் சாலை விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. அதேபோல, திருச்சி மாவட்டத்தில் இருந்து மாநாட்டுக்கு காரில் சென்ற தவெக நிர்வாகிகளும் விபத்தில் சிக்கி பலியாகினர். மொத்தமாக மாநாட்டுக்கு வந்தவர்களில் 6 பேர் விபத்துகளில் பலியாகினர்.
தவெக மாநாட்டுக்கு வருகை தந்தபோது விபத்துகளில் சிக்கி பலியானோருக்கு தவெக தலைவர் விஜய் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்தார். வழக்கறிஞர் கில்லி VL.சீனிவாசன், JK.விஜய்கலை, வசந்தகுமார், ரியாஸ், உதயகுமார், சார்லஸ் ஆகியோர் இன்று நம்மிடையே இல்லை என்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ஈடு செய்யவே இயலாத, தாங்கொணாத் இந்தத் துயரில் இருந்து வெளிவரவே இயலாமல் மனம் தவிக்கிறது. கழகத்திற்காக இவர்கள் ஆற்றிய பணிகள் கழக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று தெரிவித்திருந்தார் விஜய்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக மாநாட்டின்போது, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நிதியுதவி வழங்கி உள்ளார். சென்னையைச் சேர்ந்த வசந்தகுமார், ரியாஸ், சார்லஸ் மற்றும் திருச்சி, திருவண்ணாமலையை சேர்ந்த உதயகுமார் என 6 பேரின் குடும்பத்தினருக்கும் நிதி உதவி வழங்கி உள்ளார் விஜய். உயிரிழந்த ஆறு பேரின் குடும்பத்தினரையும் தவெகவின் பனையூர் அலுவலகத்திற்கு வரவழைத்த தவெக தலைவர் விஜய், அவர்களின் குடும்பச் சூழலுக்கு ஏற்றார்போல் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் நிதி வழங்கியுள்ளார். இறந்தவர்களின் குழந்தைகளின் கல்வி செலவையும் த.வெ.க தலைவர் விஜய் ஏற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், “மகிழ்ச்சியாக உங்களைச் சந்திக்க விரும்பினேன். இப்படி ஒரு சூழலில் சந்திக்க நேரிட்டுவிட்டது. என்ன தேவை இருந்தாலும் உடனே தொடர்பு கொள்ளுங்கள்” என தனது கட்சி தொண்டர்களின் குடும்பத்தினரிடம் விஜய் உருக்கமாகத் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.